1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிறுகதை உத்திகள்

Discussion in 'Stories in Regional Languages' started by saidevo, Mar 28, 2013.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுகதை யென்பது

    சின்னதாக அமையும் கதைகளில் பல ரகங்கள் உள்ளன. சொந்த அனுபவங்களை ’டயரி’யில் பதிப்பதோர் கதை. பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வருணிப்பது கதை. குழந்தைகள் பேசுவதே ஒரு கதை. இன்னும் காதலன்-காதலி பேச்சு, நண்பர்கள் அரட்டை போன்ற சமாசாரங்களில் கதைகளைப் பெரிதும் காணலாம். இது போன்ற சின்னக் கதைகளுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு?

    ஒரு சிறுகதையில் முக்கியமாக மூன்று கூறுகள் இருக்கவேண்டும்: conflict, crisis, resolution (epiphany) என்று இவற்றை ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழில் முரண்பாடு, உச்ச நெருக்கடி, இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு) என்று சொல்லலாம். மேற்சொன்ன சின்னக் கதை ரகங்களில் இந்த மூன்றும் இருந்தால் அவை சிறுகதை வடிவும் பெறக்கூடும்.

    முரண்பாடு

    முரண்பாடு என்பது வேறொன்றுமில்லை: கதையின் முக்கிய பாத்திரம் ஒன்றை ஆவலுடன் விழைந்து அது நிகழ நிகழலிருக்க சாத்தியக் கூறுகள் இருப்பதுதான். அந்த விழைவு வன்முறையைச் சார்ந்ததாகவோ பகட்டாகவோ இருக்க வேண்டுவதில்லை. விழைவின் திண்மையே முக்கியம்.

    முரண்பாடுகளைப் பொதுவாக இப்படிப் பாகுபடுத்தலாம்:

    மனிதன்-மனிதன் முரண்பாடு
    மனிதன்-இயற்கை முரண்பாடு
    மனிதன்-கடவுள் முரண்பாடு
    மனிதன் தனக்குள் முரண்பாடு
    மனிதன்-சமூகம் முரண்பாடு
    மனிதன்-இயந்திரம் முரண்பாடு

    முரண்பாடு கதையின் தொடக்கத்திலேயே ஏற்படுத்தப்படுகிறது. கதையோட்டத்தில் அது விரிக்கப்படுகிறது. ஓர் உச்ச நெருக்கடி நிலையை அடைகிறது. கடைசியில் தீர்வு காணப்படுகிறது.

    உச்ச நெருக்கடி

    முரண்பாட்டைத் தீர்க்கக் கதையின் முக்கிய பாத்திரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், செய்யும் காரியங்கள் போன்றவை அதை ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் செலுத்துகின்றன. இந்த உச்ச நெருக்கடி வெளியிலிருந்து வருவதாக இருக்கலாம், அல்லது மனதில் நிகழ்வதாக இருக்கலாம். எப்படியாயினும் இது இயல்பாக நிகழ வேண்டும், கதாசிரியர் திணித்ததாக இருக்கக் கூடாது. இது கதாபாத்திரங்களின் ஒருவருக்கொருவர் உடாடிச் செயல்படுவதன் விளைவாக நிகழ வேண்டும். சில சமயங்களில் இது இயற்கையால் கடவுளால் ஏற்படுத்தப் பட்டதாக இருக்கலாம், ஆனால் அப்போதும் அது இயல்பாக நிகழ வேண்டும். இயல்பாக என்றால் இப்படி நிகழ்ந்தது நியாயமே அல்லது தவிர்க்க முடியாததே என்ற எண்ணத்தை, உணர்வை கதையின் முக்கிய பாத்திரத்திடமும் வாசகன் மனதிலும் தோன்றச் செய்வது.

    இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு)

    இறுதித் தீர்வு கதையின் முக்கிய பாத்திரம் விழைந்தது நிகழ்வதாக இருக்கலாம். நிகழாமல் போவதாக இருக்கலாம். நிகழ்ந்ததன் விளைவுகளாக இருக்கலாம். நிகழாததன் காரணத்தை முக்கிய பாத்திரம் புரிந்துகொள்வதால் அதன் மனதில் தங்கும் இறுதியான புரிதல் உணர்ச்சியாக இருக்கலாம்.

    இன்றைய கதைகளில் பல சமயம் இறுதி தீர்வினை வாசகனிடமே விட்டுவிடுவது உண்டு. அப்படி வரும்போது அந்தப் புரிதல் உணர்வு வாசகனுக்கு ஏற்படுகிறது.

    முதலில் ஏற்பட்ட முரண்பாடு ஓர் உச்ச நெருக்கடியை அடைந்ததும் தீர்வாக ஒரு மாற்றம் கதையில் நிகழவேண்டும், இது முக்கியம். அல்லது இந்த மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு முடிவு அல்லது அதற்கான வாய்ப்பு கதையின் முக்கிய பாத்திரத்துக்கோ வாசகனுக்கோ பிரத்யட்சமாக வேண்டும்.

    எனவே, சிறுகதை திடீரென்று நடுவில் தொடங்கி, ஒரு முரண்பாட்டையும் அதன் விளைவான அழுத்த உணர்வுகளையும் ஏற்படுத்தி விரைவாக அது ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் சென்று பின்னர் அதற்கொரு தீர்வினை (அல்லது தீர்வுக்கான வாய்ப்பினை) ஏற்படுத்தி முடிகிறது.

    இந்த மூன்று கூறுகளையும் சிறுகதையில் அமைக்க உதவும் உத்திகள் பற்றி அடுத்த பதிவுகளில் பார்க்கலாம். இடைப்பட்ட நேரத்தில், இவற்றை தி.ஜா.வின் ’குழந்தைக்கு ஜுரம்’, ’சிலிர்ப்பு’ கதைகளில் அடையாளம் கண்டு இந்த இழையில் பதிய ஆர்வலர்கள் முனையலாம்.

    சுட்டிகள்:
    ’குழந்தைக்கு ஜுரம்’


    ’சிலிர்ப்பு’


    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
    1 person likes this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Beautiful Ramani Sir. And I am a follower of Azhiya SudargaL as well. Read both the stories of Thi.Jaa.
    Glad to read this and thanks for your effort. If you ever find time to kill, I request you to see my blogs, though they may all be immature attempts. -rgs
     
    1 person likes this.
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    தி.ஜா.வின் இந்த இரண்டு கதைகளிலும் சிறுகதையின் மூலக்கூறுகளை இப்படி அடியாளம் கண்டுகொள்ளலாம்:

    ’குழந்தைக்கு ஜுரம்’
    முரண்பாடு கதைத் தலைப்பிலேயே சுட்டப்பட்டு முதல் பத்தியில் சின்ன வாக்கியங்களில் வினைச்சொற்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது:

    "மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது."

    "இனிமே இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவனா!" என்று சூளுரைத்துவிட்டு வந்த புத்தகம் பிரசுரிக்கும் பஞ்சாபகேசனை குழந்தையின் வைத்தியச் செலவுக்குப் பணம்தேடி நாட வேண்டும் என்கிற கட்டாயம் வரும்போது, அப்படிச் சூளுரைத்த நிகழ்ச்சியில் பஞ்சுவின் பித்தலாட்டம் ஞாபகம் வர வாத்தியார் தயங்குவதில் உச்ச நெருக்கடி அறிமுகப்படுத்தப் பட்டு, மனைவியின் பரிந்துரையில் பஞ்சு இன்னும் பிரசுரிக்க வேண்டிய வாத்தியாரின் ஒரு புத்தகத்தைத் திருப்பி வாங்கும் சாக்கில் அவர் ஏதேனும் ’அட்வான்ஸ்’ பணம் தருவாரா என்று ’பஸ்’ பிடித்துச் செல்லும்போது நெருக்கடி விரிக்கப்பட்டு, பஞ்சுவின் வீட்டில் அவர் மனைவியே வியாதியில் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்று அறியும் போது, சிறுகதையின் முக்கிய அம்சமான அந்தத் திருப்பம் நிகழ்கிறது.

    தன் குழந்தையை மறந்துவிட்டு வாத்தியார் பஞ்சுவின் மனைவியை வைத்தியரிடம் அழைத்துச் செல்ல முனையும் நிகழ்ச்சிகளில் கதையின் இறுதித் தீர்வு அறிமுகப் படுத்தப்பட்டு அதன்பின் தனக்குத் தெரிந்த ஒரு வைத்தியரிடம் குழந்தையின் ஜுரம்போக்கும் மாத்திரைகளைக் கடனில் வாங்கிக்கொண்டு பின்னிரவில் தன் வீட்டை நோக்கி நடந்தே செல்லும்போது வாத்தியார் மனதில் எழும் உணர்வுகளில் அவருக்கு எழும் புரிதல் உணர்வு விவரிக்கப்படுகிறது.

    *****

    ’சிலிர்ப்பு’

    கதையின் முரண்பாடு மறைமுகமாக முதல் பத்தியின் கடைசி வாக்கியத்தில் அறிமுகப்படுத்தப் படுகிறது:
    "ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது."

    கதையின் கரு இது:
    தாயை விடுமுறையில் பிரிந்த குழந்தையொன்று தந்தையின் அரவணைப்பில் தன் தாயிடம் மீண்டும் செல்கிறது. இன்னோரு ஏழைக் குழந்தை தன் தாயைப் பிரிந்து வேறோர் பணக்காரக் குடும்பத்தின் குழந்தைக்குத் தாய்மை சேவை செய்யச் செல்கிறது. இந்த இரண்டு குழந்தைகளுடனும் தொடர்பு கொண்ட பெரிய மனித உள்ளங்களின் கயமை, கையாலாகாத்தனம்... வறுமையின் கௌரவம், மனிதாபிமானம்...

    தன் குழந்தையை வீட்டுக்கு ரயிலில் அழைத்துச் செல்லும் தந்தையின் பார்வையில், ’தன்மை இடத்தில்’ (first person) கதை நகரும் போது வறுமையில் வாடும், வயதில் இளைய, அனுபவத்தில் முதிர்ந்த அந்த இரண்டாவது குழந்தையைத் தந்தை ரயிலில் சந்திக்கும்போது கதை உச்ச நெருக்கடியை நோக்கிச் செல்கிறது.

    கதையின் இறுதித் தீர்வாக ஏதும் சுட்டப் படாததே இந்தக் கதையின் சிறப்பு. வறுமையின் கௌரவமும் மனிதாபிமானமும் திறமையும் கயமை நிறைந்த பணக்காரப் பெரிய மனிதர்களைப் பிழைப்புக்கு நம்பியிருக்கும் போது வறுமைக்கு என்ன தீர்வு கிடைக்க முடியும்? தன் வாழ்வில் வறுமையை இன்னும் போதிய அளவு தாண்டாத தந்தைக்கு இந்த ரயில் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தில் அவர் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதனால் அவருக்குத் தன் குழந்தை மீது பீறிடும் பாச உணர்வில் கதையின் புரிதல் உணர்வு விவரிக்கப் படுகிறது.

    தந்தையுடன் வாசகன் தன்னை முழுவதும் ஐக்கியப் படுத்திக்கொண்டு கதையைப் படிக்க வைத்ததால் தந்தைக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு வாசகனுக்கும் ஏற்படுகிறது.

    *****
     
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுகதை எழுத விரும்பும் ஆர்வலர்கள் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை:

    சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
    ஜெயமோகன்


    இந்தக் கட்டுரையில் உள்ள பரிந்துரைகளைவிடச் சொல்வதற்கு அதிகம் இல்லை யென்று தோன்றுகிறது. பல கதைகளை அலசுவதன் மூலம் ஆர்வலர்கள் இந்த உத்திகளைத் திறம்படக் கையாளாலாம்.
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    வணக்கம்.

    பல கருத்துகள் இதற்கு உதவும் என்பதால் நான் இந்தக் கட்டுரையைப் பிற மன்றங்களிலும் பதிவுசெய்து வருகிறேன். சில வினாக்களுக்கு பதிலாகச் சில உத்திகளைப் பற்றி என் கருத்தை ஆங்காங்கே சொல்ல வேண்டியிருக்கிறது என்பதால், இந்த மன்றத்தில் அந்தச் சுட்டியைக் கொடுப்பது பயன்தரும் என்று தோன்றுகிறது. இவ்வகையில் இதுவரை பேசப்பட்ட உரிப்பொருள்களும் சுட்டிகளும் கீழே:

    01. சிறுகதையில் திருப்பம், நகைச்சுவை


    02. சிறுகதையின் அளவு


    03. சிறுகதையில் ஓர் செய்தியைத் தருவது பற்றி


    04. பத்திரிகையில் ஒரு புதுமுக எழுத்தாளனின் கதை பிரசுரமாவது பற்றி

    05. கதைக்கூற்றின் நோக்கு narrative perspective பற்றி


    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    காக்கா-நரி சிறுகதை (அசரவைக்கும் திருப்பங்களுடன்!)

    ஜெயமோகன் திரித்த காக்கா-நரிக் கதையை நாம் மேலும் திரித்து எண்ணையிட்டுச் சிறுகதை விளக்கில் ஏற்றிக் கதையைத் திருப்பங்களுடன் மூன்று வித நோக்குகளில் சொல்வோமா?

    தன்மை ஒருமை (first person singular)

    எனக்கு அந்தப் பாட்டி சுடும் வடைகளின் மேல் ரொம்ப நாளாக ஒரு கண். ஒரு நாள் அவள் அசந்த சமயம் பார்த்து ’டைவ்’ அடித்து ஒரு வடையைக் கௌவிக்கொண்டு பறந்து வந்து வசதியாக ஒரு மரக்கிளையின் மேல் அமர்ந்துகொண்டேன்.

    அந்த சமயம் பார்த்து அங்கு ஒரு தந்திரக் குள்ளநரி வந்தது. என்னை அன்புடன் பார்த்து, "ஓ காக்கையே! எவ்வளவு அழகாக நீ இருக்கிறாய்! உன் குரல்தான் என்ன இனிமை! எனக்கு வெகுநாட்களாக உன் பாட்டைக் கேட்க ஆசை. எங்கே ஒரு பாட்டுப் பாடேன் பார்க்கலாம்."

    நரியின் வார்த்தைகள் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தன. என் உருவையும் குரலையும் பாராட்டும் முதல் உயிரினம் இந்த நரிதான் என்று தோன்றியது. கூடவே நரியின் தந்திர புத்தி ஞாபகம் வர, அதன் நோக்கம் புரிந்தது. இந்த விளையாட்டை ஆடித்தான் பார்ப்போமே என்று வடையை ஒரு காலடியில் பத்திரமாக வைத்துக்கொண்டு என்னால் இயன்ற இன்குரலில் பாடினேன்.

    நரியின் கண்கள் சிவந்து முகம் கருத்தது. சமாளித்துக்கொண்டு முகத்தை முன்போல் அன்பாக வைத்துக்கொண்டு, "உன் இனிய குரலில் நீ பாடியது கேட்டு மகிழ்ந்தேன். உனக்கு நாட்டியம் கூட நன்றாக வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது உன் கால்களைத் தூக்கிக் கொஞ்சம் ஆடிக் காட்டினால் அக மகிழ்வேன்", என்றது.

    விளையாட்டுப் போதும் என்று தோன்றிவிட, நரியிடம் தீர்மானமாகக் கூறினேன்: "குள்ளநரியே! என்னை மடையன் என்றா நினைத்தாய்? முன்பொரு முறை எனக்கு தாகம் எடுத்து ஒரு தண்ணீர்க்குடத்தில் அமர்ந்தபோது அதில் கொஞ்சமே தண்ணீர் இருந்தது கண்டு நான் சுற்றிலும் இருந்த கற்களை ஒவ்வொன்றாகக் கௌவிக் கொண்டு வந்து குடத்தில் போட்டு நீர்மட்டம் மேல்வரச் செய்து நீரருந்தியது உனக்கு நினைவில்லையா? நிச்சயம் உனக்கு நான் ஆடிக் காட்டுவேன். கொஞ்சம் பொறு, அதற்குமுன் சுவையான இந்த வடையை இளஞ்சூடாக உள்ளபோதே தின்றுவிடுகிறேன்."

    என் அலகினால் அந்த மொறுமொறு வடையைக் கரகரவென்று கொத்தித் தலையை உயர்த்தி விழுங்கினேன். இரண்டொரு துண்டுகளாவது கீழே விழும் என்று காத்திருந்து பார்த்துவிட்டு, "சீசீ! இந்த வடை கசக்கும்" என்று சொல்லியபடியே குள்ளநரி ஓடிப்போனது.

    *****

    முன்னிலை ஒருமை (second person singular)

    போன ஜன்மத்தில் நீ ஒரு காக்கையாகப் பிறந்தது உனக்கு ஞாபகம் இருக்காது. நீ என்ன செய்தாய் தெரியுமா? ஒரு ஏழைப் பாட்டி தன் பிழைப்புக்காகச் சுட்டு விற்ற வடைகளில் ஒன்றைக் கௌவிக்கொண்டு பறந்து வந்து, இதோ, இந்த மரத்தின் முதல் கிளையில்தான் உட்கார்ந்தாய்.

    அப்போது நான் உன்னைச் சோதிப்பதற்காக ஒரு குள்ளநரி வடிவில் உன்முன் தோன்றினேன். ஏன் உன்னைச் சோதிக்க நினைத்தேன் தெரியுமா? எனக்கும் என் நண்பனாகிய இன்னொரு தேவனுக்கும் போட்டி. காக்கைக்கு மூளையே கிடையாது என்பது என் கட்சி. "தவறு, ஒரு காக்கை குள்ளநரியைக் கூட ஏமாற்றும் அளவுக்கு புத்திசாலி. முன்பொரு முறை காக்கைக்கு தாகம் எடுத்து ஒரு தண்ணீர்க்குடத்தில் அமர்ந்தபோது அதில் கொஞ்சமே தண்ணீர் இருந்தது கண்டு அது சுற்றிலும் இருந்த கற்களை ஒவ்வொன்றாகக் கௌவிக் கொண்டு வந்து குடத்தில் போட்டு நீர்மட்டம் மேல்வரச் செய்து நீரருந்தியது உனக்கு நினைவில்லையா?" என்றான் அவன். எங்களுக்குள் பந்தயம். ஜெயிப்பவர் இந்திரன் அரண்மனையில் சேவகம் செய்யலாம்.

    நீ மரக்கிளையில் அமர்ந்ததும் உன்னிடமிருந்து வடையைப் பறிப்பதற்காக உன்னை ஒரு பாட்டுப் பாடுமாறு நரி கேட்டதை இப்போது நீ ஒரு நீதிக் கதையில் படிக்கிறாய். ஆனால் கதையில் வருவது போல் அல்லாமல் உன் இனத்தில் இல்லாத அதிசயமாக அன்று நீ என்ன செய்தாய் தெரியுமா? பாவி, வடையைக் காலடியில் வைத்துக்கொண்டு உன் கரகர குரலில் என் இனத்தைச் சேர்ந்த நரியொன்று நீலச் சாயத் தொட்டியில் விழுந்த கதையைப் பாடி என்னைக் கேலி செய்தாய்.

    நான் பந்தயத்தில் தோற்று இந்திர சேவக பதவியை இழந்ததாலும், நான் உருவெடுத்த நரியினத்தை நீ கேலி செய்ததாலும் நான் உன்னைச் சபித்தேன். என்ன சாபம் என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பாய்: "நீ மனிதனாகப் பிறந்தாலும் காக்கா பிடிக்காமல் எந்தக் காரியமும் நடக்காதிருக்கக் கடவாய்" என்ற சாபம் உன் இந்த ஜன்ம மனித வாழ்வில் எவ்வளவு உண்மையாகி விட்டது பார்த்தாயா? அதுமட்டுமல்ல, எவ்வளவுதான் நீ காக்கா பிடித்தாலும் மனிதரிடையே உள்ள குள்ளநரிகள் உன்னைத் தொடர்ந்து ஏமாற்றுவது உனக்கு இந்த ஜன்மத்தில் எங்கே புரியப்போகிறது?

    உன் கதையைப் பொறுமையாகக் கேட்டு உண்மை அறிந்ததற்கு நன்றி. போய்வருகிறேன், நீ உடல்நீத்து உயிராகும் போது மீண்டும் சந்திப்போம்.

    *****

    படர்க்கை தற்சாரா ஒருமை (third person singular objective)

    தன் தாத்தா-பாட்டி சொல்லி அப்பா-அம்மா கேட்ட காக்கை-நரிக் கதையைத் தந்தை தன் ஆறு வயது செல்ல மகனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அதுவும் எப்படி?

    தந்தையின் தாத்தா-பாட்டி கதையைக் காதால் மட்டுமே கேட்டனர். தந்தையின் அப்பா-அம்மாவோ புத்தகத்தில் படித்தனர். தந்தை கேட்டும் படித்தும் அறிந்ததுடன் தன் கல்லூரி நாட்களில் ’எங்க பாப்பா’ திரைப்படத்தில் புகழ்பெற்ற ஒரு திரைப்பாடலாகவும் அதைப் பார்த்தார்.

    கணிணி மென்பொருள் விறப்பன்னரான தந்தை காலத்துக் கேற்றவாறு ஒரு கணிணிப் பல்லூடக கேலிச்சித்திரத் தொடராக (computer multimedia caroon sequence) இந்தக் கதையைத் தயாரித்து மகனுக்குக் காட்டினார். அதனால் பெரிதும் கவரப் பட்ட மகன் கடந்த ஒரு மாத காலமாகப் பள்ளி செல்லும் ஷேர்-ஆட்டோ வாசலில் கொம்பொலிக்கும் வரை கதையைக் கணினியில் பார்த்து ரசிப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டான். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியதும் முதல் காரியமாக இந்தக் கதைதான்.

    கதையில் மகன் ரசித்ததோ கேலிச் சித்திரங்களின் நகைச்சுவை பாவங்களும், படங்களின் இயற்கை வண்ணச் சூழல்களும் ஒலிகளும் அதனுடன் விரவிய அந்தத் திரைப்பாட்டும்தான். மற்றபடி கதையோ அதன் கருத்தோ அவனுக்கு இந்த வயதிலேயே அபத்தமாகப் பட்டது. தான் காக்கையாக இருந்தால் அவ்வளவு எளிதில் அந்தக் குள்ளநரியிடம் தோற்க மாட்டோம் என்று அவனுக்குத் தோன்றியது.

    மகனுக்கு காக்கை செய்திருக்க வல்லதாகப் பலவிதமான சாத்தியங்கள் மனதில் தோன்றின. காலிடுக்கில் வடையை வைத்துக்கொண்டு காக்கை பாடியிருக்கலாம். அதன்பின் நரி தந்திரமாகத் தன்னைக் காலைத் தூக்கி ஆடச் சொன்னால் வடையைக் கிளையில் ஒரு குச்சியில் தொங்க வைத்துவிட்டு ஆடியிருக்கலாம். அல்லது நரியின் முதுகிலேயே உட்கார்ந்து ஆடியிருக்கலாம்! நரி நகத்தால் பிராண்டினால் தனக்குத்தான் கூர்மையான மூக்கு இருக்கிறதே? எப்படி யிருந்தாலும் இன்னொரு காக்காவிடமோ அல்லது வேறு பறவையிடமோ வடையைத் தப்பித் தவறிக்கூட வைத்துக்கொள்ளுமாறு சொல்லிவிடக் கூடாது. மறுபடியும் பாட்டியின் கடைக்குச் சென்றால் கல்லெறிதான் கிடைக்கும்.

    ஒரு வார இறுதி விடுமுறை நாட்களில் மகன் ஆவலுடன் தந்தையிடம் தந்தியடித்தான்: "அப்பா, அப்பா! இந்தக் காக்கா-நரிக் கதை தினமும் அதே மாதிரி பாத்துப் பாத்து எனக்கு ரொம்ப போர் அடித்து விட்டதுப்பா. கதையை நான் காக்கா ரோல்லயோ நரி ரோல்லயோ விளையாட முடியற மாதிரி உங்க ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஒரு கம்ப்யூட்டர் கேம்-ஆக டெவலப் பண்ணிக் கொடுத்தால் நல்லா இருக்குமேப்பா! ப்ளீஸ்ப்பா, இந்தப் பத்து நாள்ல என் எக்ஸாம்லாம் முடியறதுக்குள்ள சீக்கிரம் எழுதிக்குடுப்பா! லீவுல நான் என் ஃப்ரெண்ட்ஸ்க்கு நரி ரோல் குடுத்து அவங்களை நான் தண்ணி காட்டுவேன்!"

    *****

    சிறுகதையின் அமைப்பும் உத்திகளும் தாக்கமும் இப்போது ஓரளவுக்குப் பிடிபட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதுபோன்று குறுகதைகள் பலவகைகளில் உத்திகளில் எழுதிப் பயிற்சி செய்வது உங்கள் ஆர்வத்தைச் செயல்படுத்த ஏதுவாகும்.

    *****
     
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுகதை உத்திகள்: தலைப்பு, முதல் வாக்கியம், பத்தி/பாரா

    ஒரு சிறுகதை எழுதி முடித்தபின், உங்கள் கதையின் தலைப்பு, முதல் வாக்கியம், முதல் பத்தி இவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். அதேபோல் சிறுகதையையும் உடனே அனுப்பாமல்/பதிவு செய்யாமல் சில நாட்கள் இடைவெளி கொடுத்து மீண்டும் ஒருமுறை படியுங்கள். மாறுதல்கள் ஏதும் மனதில் பட்டாமல் பழைய கதையைப் பிரதி எடுத்துக்கொண்டு தயங்காமல் செய்து பாருங்கள்.

    * சிறுகதைத் தலைப்பு கதைக்குப் பொருத்தமாக, கதை விஷயத்தைச் சுட்டுவதாக, அதே சமயம் புதுமையாக, வசீகரமாக இருக்கிறதா? வாசகனுக்கு எளிதில் நினைவுக்கு வருவதாக இருக்கிறதா? அயர்ச்சி தருவதாக இல்லாமல் இருக்கிறதா? தேய்ந்த சொற்றொடராக (cliche) இல்லாமல் இருக்கிறதா?

    * கதைத் தலைப்புகள் மக்களிடம் பிரபலமான ஒன்றாக இருக்கலாம். (’ஊழல் பிரதிநிதி’) வார்த்தை ஜாலத்துடன் இருக்கலாம். (’கல்வி முயலும் கேள்வி முயல்’) உள்ளுறை பொருளுடன் இருக்கலாம். (’முள்ளும் மலரும்’) மனிதர், ஊர் அல்லது இடப் பெயராக இருக்கலாம். ஒரு செயலைச் சுட்டுவதாக இருக்கலாம். (’கழுதைமேல் சவாரி’) கதையில் வரும் ஒரு சொற்றொடராக இருக்கலாம். (’இந்தக் கதை ஒரு மாயச் சுழல்’) ஓர் எளிய சொல்லாக இருக்கலாம். (’சலனம்’).

    * கதையின் முதல் வாக்கியமும் பத்தியும் வாசகனைக் கவர்வதாக இருக்கவேண்டும். கதையின் மனநிலையையும் (mood, குரலையும் (tone) ஆரம்பித்து வைப்பதாக இருக்கவேண்டும். அதே சமயம் அதீத கெட்டிக்காரத் தனமாகவோ, வெளிப்படையாகவோ இல்லாமல் கதையின் மறைவிஷயத்தைக் கோடிகாட்டுவதாக இருக்கவேண்டும்.

    சில சான்றுகள் (இவை எந்த வகையிலும் முழுமையான சான்றுகள் அல்ல).

    சில சிறுகதைத் தொகுப்பு வலைதளங்கள்


    *****
    அசோகமித்திரன்
    காலமும் ஐந்து குழந்தைகளும்

    அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.

    *****
    ஆதவன்
    சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்

    சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனத்தில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.

    ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்
    டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.

    *****
    அம்பை
    காட்டிலே ஒரு மான்

    அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள்.

    *****
    கு.அழகிரிசாமி
    இருவர் கண்ட ஒரே கனவு

    வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல் போனதுதான்.

    *****
    இந்திரா பார்த்தசாரதி
    ஒரு கப் காப்பி

    ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம்.

    *****
    ரெ.கார்த்திகேசு
    பாக்கியம் பிறந்திருக்கிறாள்

    பயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். "பாத்து பாத்து..." என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் ராக்ஷசப் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டிச் சிதறிவிடும் போல இருந்தது. எனது வலது உள்ளங் கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெதுவெதுத்ததை உணர முடிந்தது.

    *****
    சுஜாதா
    நகரம்

    பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ’மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ’மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ’மெதோரா’ என்று குறிக்கப்படுவதும் இத்தமிழ் மதுரையேயாம்.
    -கால்டுவெல் ஒப்பிலக்கணம்

    *****
    சுந்தர ராமசாமி
    விகாசம்

    அம்மா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். நான் கட்டிலை ஒட்டிக் கீழே படுத்துக்கொண்டிருந்தேன். பிந்தி எழுந்திருப்பதை நானும் அம்மாவும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் சிறிது போராடிப் பெற்றிருந்த உரிமை இது. சூரியோதயத்திற்கு முன் குளியலை முடித்து விடும் தர்மத்தை யுகாந்திரங்களாகக் காப்பாற்றி வரும் குடும்பம். நாங்களோ நோயாளிகள். அம்மாவுக்கு ஆஸ்துமா. எனக்கு மூட்டுவலி. இரண்டுமே காலை உபாதைகள் கொண்டவை.

    *****
    ஜெயகாந்தன்
    பூ உதிரும்

    பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும்.

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி
    தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!

    குரு பீடம்
    அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.

    *****
    புதுமைப்பித்தன்
    கடவுளும் கந்தசமிப் பிள்ளையும்

    மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ’பிராட்வே’யும் ’எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். ’டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் ’கப்’ காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...’

    இரண்டு உலகங்கள்
    ராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம் போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பது அவருடைய மதம். அதை அசைக்க யத்தனித்தவர்கள் பாடு திண்டாட்டம். குறைந்தது இரண்டு மணி சாவகாசமாவது கையில் வைத்துக் கொண்ட பிறகுதான் அவரை நெருங்கலாம்.

    *****
    மாலன்
    கல்கி

    இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புகளை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை.

    *****
    இரா.முருகன்
    ஆதம்பூர்க்காரர்கள்

    மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் ‘ என்று கண்ணபிரான் சொன்னபொழுது, நானுந்தான் என்று அரையாண்டுத் தேர்வும் சேர்ந்து கொண்டது.

    *****
    லா.ச.ரமாமிர்தம்
    பாற்கடல்

    நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும்.

    *****
    கி.ராஜநாராயணன்
    ஒரு வாய்மொழிக் கதை

    கதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன்.

    எங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, ‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச் சொல்லவா ‘ண்ணு கேக்கிறதுண்டு. நாம ரெண்டுலெ எதையாவது கேட்டு வைக்கணும். ஆனா அவங்க வாழ்ந்த கதையும் வராது; தாழ்ந்த கதையும் வராது. ஏதாவது ஒரு கதை வரும்.

    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுகதை இலக்கிய நடை

    ஒரு சிறுகதையில் கதைக்கூற்று அல்லது கதைசொலல், வருணனை, உரையாடல், மனவோட்டம் இவை நான்கும் கலந்து வருவதால் கதையின் இலக்கிய நடை அதற்கேற்ப மாறுபடும். கதையின் நடையே அதன் குரலாய் ஒலிக்கிறது என்பதால் வெவ்வேறு நடைகள் கதையின் குரலில் இசைந்து வரவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

    1. கதைக் கூற்று அல்லது கதைசொலல் நடை

    ஒரு சிறுகதையை ஆசிரியர் பொதுவாகத் தன்மை, முன்னிலை, படர்க்கை, சர்வஞானம் என்ற நான்கு நிலைகளின் நோக்கில் நின்று கதை சொல்லலாம் என்று பார்த்தோம்.


    இந்த நான்கு நிலைகளிலும் ஆசிரியர் கதையின் மையப் பாத்திரத்தை முன்னிறுத்துவதுடன், மற்ற பாத்திரங்கள், கதைக்களன், கதைச்சூழல், முன்கதை போன்றவற்றையும் விவரித்து எழுதும்போது இடத்திற்கேற்ப நடை மாறுபடுகிறது.

    * தன்மை நிலையில் ஆசிரியர் முற்றிலும் ஒளிந்துகொள்ள மையப் பாத்திரமே நினைப்பது, பேசுவது, வருணிப்பது போன்றவற்றைச் செய்கிறது. ஆசிரியர் குறுக்கீடு அறவே இல்லாது அமைய வேண்டுவதால் இந்தக் கூற்று எல்லாவற்றிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    * முன்னிலை நிலையில் மையப் பாத்திரமும் ஆசிரியரும் சேர்ந்து கதையை நகர்த்துகிறார்கள். வாசகனே மையப் பாத்திரம் ஆவதால் இவ்வாறு எழுதுவது கடினும்.

    * படர்க்கை நிலையில் ஆசிரியர் ஓரு சில வெவ்வேறு பாத்திரங்களுடன் சேர்ந்து கதை புனைகிறார். படர்க்கையிலும் ஆசிரியர் தன்னை ஒளித்துக்கொண்டு ஓரிரு பாத்திரங்களின் நோக்கில் தற்சார்பாகக் கதைசொல்ல முடியும்.

    * சர்வஞான நிலையிலோ ஆசிரியர் கடவுளாகிக் கதையில் எல்லாவற்றையும் தன்னோக்கில் சொல்கிறார்.

    இப்படி வெவ்வேறு நடைகளில் எழுதுவதற்கு ஆசிரியர் தனக்கென்று ஓர் இலக்கிய நடையை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். ஆசிரியரின் சொந்த இலக்கிய நடை பொதுவாகக் கவிதை அழகுடனும் கவிதை சார்ந்த கூறுகளுடனும் இருப்பது வழக்கம். கதை விவரிக்கும் மண்ணின் கலாச்சாரமும் பண்பாடும் நடையை நிர்ணயிப்பதாக அமைவதுண்டு. பாத்திரங்களின் இயல்பை உணர்ந்து அவர்கள் நினைப்பதையும் பேசுவதையும் அவர்கள் பாணியில் எழுதவேண்டும். இந்த நடைகள் யாவும் ஒன்றுக்கொன்று இசைந்து வருமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    சில சான்றுகள்:
    1. வழி தெரியவில்லை: சுஜாதா (தன்மை நோக்கில்)


    ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான் சென்னையில் தப்பவிட்ட படம். ஊரெல்லாம் சளைக்காமல் ஓடி ஓய்ந்துவிட்டு மொபஸலில் ஓடிக்கொண்டு இருந்தது. நல்ல படம் என்று நண்பர்கள் வற்புறுத்திப் பார்க்கச் சொன்னார்கள்.
    ...
    தென்னங்கீற்று சிங்கிள் ப்ரொஜக்டர் சோடா கலர் கை முறுக்(கு) கொட்டகை. டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்தேன். ஒரு நாய், காலடியில் ஓடியது. கொசு, காதடியில் பாடியது. காஞ்சனா ஈஸ்ட்மென் கலரில் சிரித்...

    ஆனால், இந்தக் கதை அந்த சினிமாவைப் பற்றியது அல்லவே. சினிமா பார்த்துவிட்டு நான் ஸ்டேஷனுக்குத் திரும்பியபோது, எனக்கு ஏற்பட்ட விநோத அனுபவத்தைப் பற்றியது...
    ...
    வந்த வழி ஞாபகம் இருந்தது. அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இரவின் இருள் காரணமோ, அந்தத் தெருக்களின் பின்னல் காரணமோ, வழி தவறிவிட்டேன். போகிறேன்... போகிறேன்... ஸ்டேஷனையே காணோம்.
    ...
    நல்லவேளை, எதிரில் ஒரு சைக்கிள் ரிக்-ஶாகாரன் தென்பட்டான்.
    ...
    "ஸ்டேஷனுக்குப் போகறதுக்கு இங்கே வந்தியா?" என்றான்.

    ""ஏன்?"

    "வழி தப்பு."
    ...
    ரிக்-ஷா சென்றுகொண்டு இருந்தது. மறுபடி ஒரு சந்தில் ஒடித்தது.

    ஏன் பயப்படுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன். அடுத்து நடக்கப்போவது என்ன என்பது தெரியாததால், இருட்டால், அந்தப் பாழாய்ப் போகிற பாட்டால்.

    என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசித்தேன். ரூபாய் முப்பதோ என்னவோ. ஆனால், ரிஸ்ட் வாட்ச்? மோதிரம்?

    அவன் என்னை எங்கு அழைத்துச் செல்கிறான்?

    சற்று நேரத்தில் எனக்குத் தெரிய வந்தது. ஒரு வீட்டின் எதிரே ரிக்ஷாவை நிறுத்தினான். இறங்கிவிட்டான்.

    (இந்தக் கதையை முழுதும் இங்கே படிக்கலாம்:


    *****

    2. மழைப் பயணம்: வண்ணநிலவன் (படர்க்கை தற்சாரா நோக்கு)

    "ஒங்க தலையில என்ன களிமண்ணா இருக்கு? பொம்பள போயிப் பேசதுக்கும் ஆம்பள பேசதுக்கும் வித்தியாசம் இருக்குய்யா. நீங்க ஒங்க தங்கச்சி, அம்மாங்கிற உருத்தோட பேசலாம். நான் அப்பிடிப் பேச முடியுமா? என்ன இருந்தாலும் நான் அடுத்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவதான?" என்றாள் சிவகாமி.

    பேச்சியப்பனுக்குத் தன் தங்கச்சியிடமும் அம்மாவிடமும் இதைப் போய்ப் பேசுவதற்கு இஷ்டம் இல்லை. மகேஸ் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறாள். அவளுடைய புருஷனுக்கு ஒழுங்கான வேலை கிடையாது. இட்லி சுட்டு, வடை சுட்டு என்று காலத்தை ஓட்டு கிறாள். சிவகாமி நினைப்பதுபோல் கயத்தாறில் அந்த இரண்டு வீடுகளுக்கு என்ன பெரிய வாடகை வந்துவிடும்? அதில் போய், ஒரு வீட்டு வாடகையைப் பங்கு கேள் என்கிறாளே சிவகாமி. அவனுக்கு அந்த யோசனையே சுத்தமாகப் பிடிக்கவில்லை.

    "இதுக்கு எதுக்கு நேர்ல போகணுங்கேன்? மகேஸுகிட்டச் செல்லுல பேசுனா போதாதா?""

    "வெவரம் புரியாமப் பேசாதீய… வாடகைப் பணத்தக் கேக்க மட்டும் போகல… ஒங்க அம்மய இங்க கூட்டிக்கிட்டு வரணும்லா? ஒங்க அம்மய அவ தன்கூட வச்சுக்கிட்டுதான் ரெண்டு வீட்டு வாடகைப் பணத்தையும் வாங்கி முடிஞ்சுக்கிடுதா!"

    (இந்தக் கதையை முழுதும் இங்கே படிக்கலாம்:


    *****

    3. கசங்கல்கள்: மாலன் (படர்க்கை தற்சார்ந்த நோக்கு)

    இவன் கவலையோடு அண்ணாந்து பார்த்தான். மழை வருகிற மாதிரி இருந்தது. இருட்டை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தது வானம். வரும், இன்று மழை வரும். அதன் எல்லா அழகுகளுக்குப் பின்னாலும் இருக்கிற சோகங்களை நினைவுபடுத்துகிற மாதிரி, மழை அதன் சோகங்களுடனும் வரும்.

    இன்றும் மழை வந்துவிட்டால் இந்தச் சட்டை காயாமல் போய் விடுமோ என்று பயமாகவும் இருந்தது. நாளைக்கு இன்டர்வியூவுக்குப் போக இந்தச் சட்டையைத்தான் நம்பியிருந்தான். இந்தச் சட்டைதான் கிழிசல் இல்லாமல், காலர் நைந்து போகாமல், கலர் மங்கிவிடாமல் பளிச்சென்று இருந்தது. இதுவும்கூட இவனுடையதில்லை. அண்ணா கொஞ்சநாள் போட்டுக் கொண்டு போவதற்காகக் கொடுத்த சட்டை. இவனது மெலிதான உடம்பிற்கு ஒரு சுற்றுப் பெரிதாக இருக்கிற சட்டை. ... மூன்றரை மணிக்கு மேல் இவனை உள்ளே கூப்பிட்டார்கள். உள்ளே இருந்தவர்கள் எல்லோருக்கும் வழுக்கைத் தலை. ஒருவர் புகைப்படங்களில் பார்க்கிற சர்ச்சில் மாதிரி சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். இரண்டு பேர் சூட் அணிந்திருந்தார்கள். ஒருவர் ஜிப்பா. மாசு மறுவில்லாத வெள்ளை ஜிப்பா. இவர்களுடைய சட்டைகளில் ஈரமோ, சகதிக் கறையோ இல்லாததைக் கவனித்தான். காலையில் பார்த்த சட்டைகள் ஞாபகம் வந்தது.

    (இந்தக் கதையை முழுதும் இங்கே படிக்கலாம்:


    *****

    வருணணை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    2. வருணனை

    சிறுகதையில் வருணனை பொதுவாக அளவோடு இருக்கும். இந்த வருணனை கதைக் களம், சூழல், காலம், பாத்திரம் பற்றியதாக இருக்கலாம்.

    1. கதைக் களம் பற்றிய அம்பையின் வருணணை (’வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’)


    ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில்...

    *****

    2. கதைச் சூழல் பற்றிய இரா.முருகனின் வருணணை (’ஆழ்வார்’)


    அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில் குனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே பழைய கட்டிடம். கீழ்ப்பகுதியில் எல்லாம் கடைகள். ஒரு மாவு மெஷினும் உண்டு. கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, மாவு மெஷினிலிருந்து ஏதோ கரகரவென்று பொடியாகப் பிளாஸ்டிக் வாளியில் சுமந்து கொண்டுவந்து தெருவில் கொட்டி, நான்கைந்து பேர் கர்மசிரத்தையாகக் கையளைந்து தேடிக் கொண்டிருந்தார்கள். மேல் மாடியில் பிரம்மச்சாரிக் குடியிருப்புகளில் மங்கிய பல்ப் வெளிச்சத்தில் களைத்துப் போன மின்விசிறிகள் சுற்றுவது ஜன்னல் வழியே தெரிந்தது. கீழே சிதறியிருந்த மாவிலிருது பரபரப்பாக ஓடிய கரப்பான் பூச்சிகள் ஏறாமல் கால் மாற்றிக் கொண்டு ஒரு ஸ்தூல சரீர வைஷ்ணவர் மேலே பார்த்து, ’சடகோபா .. சடகோபா.. ’ என்று தொடர்ந்து பெருஞ்சத்தத்துடன் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    *****

    3. கதையில் காலம்

    காலம் எனும் கூறு பொதுவாக இரண்டு விதங்களில் சிறுகதையில் கையாளப்படுகிறது: காட்சி (scene), தொகுப்பு/திரட்டு (summary). காட்சியில் ஒரு குறுகிய, கதை-இப்போது-நிகழும் காலம் விவரிக்கப் படுகிறது. தொகுப்பில் முன்கதைச் சுருக்கமாக முன்சென்ற காலம் காட்டப்படுகிறது.

    ’நடுவில் உள்ளவள்’: எஸ்.ராமகிருஷ்ணன் (ஒரு நிகழ்காலக் காட்சி)

    வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. இறந்து போன அம்மாவின் உடலை மயானத்துக்குக் கொண்டுபோவதற்காகக் காலையில் இருந்தே காத்துக்கொண்டு இருந்தோம். இன்னும் சியாமளா வந்து சேரவில்லை. அவள் சூரத்தில் இருந்து கிளம்பிவிட்டாள் என்று தகவல் வந்திருந்தது. விமானத்தில் வந்து மதுரையில் இறங்கி, கார் பிடித்திருந்தால்கூட இந்நேரம் வந்திருக்கக் கூடும்.
    ...
    "அப்படி இல்லை கணவதி. ராத்திரி போன உசுரு. நேரமாச்சுன்னா, உடம்பு தாங்காது. எல்லாரும் வேலைவெட்டியைப் போட்டுட்டு வந்திருக்காங்க. ஜோலியைப் பாத்துப் போகணும்ல..." என்றார் மாமா.
    ...
    எத்தனை முறை போன் பண்ணுவது? ஒவ்வொரு முறையும் பாஸ்கர் அழுகையோடு, "மச்சான் வந்துர்றோம். மயானத்துக்குக் கொண்டுபோயிராதீக" என்று கரைந்து அழுத குரலில் சொல்வதைக் கேட்கும்போது கலக்கமாகவே இருக்கிறது. ஆனாலும், இறந்த உடலை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் காத்துக்கொண்டு இருக்க முடியும்?
    ...
    "மாமா, ஆச்சியை எப்போ எடுப்பாக?"

    "எதுக்குடே?"

    "ராத்திரி ட்வென்டி ட்வென்டி மேட்ச் இருக்கு, அதைப் பாக்கணும்."

    "அதுக்குள்ள எடுத்திருவாக."
    ...
    டவுன் பஸ் வந்து நிற்கும் ஓசை கேட்டது. யாரோ ஒரு பெண் பேருந்தில் இருந்து இறங்கி ரோட்டிலேயே மாரில் அடித்துக்கொண்டு, "என்னப் பெத்த மகராசி... என் சிவக்குளத்துப் பொறப்பே..." என்று புலம்பியபடியே, வேகமாக வந்துகொண்டு இருந்தாள். அம்மாவின் ஊரில் இருந்து வந்திருக்கிறாள் என்பது மாத்திரம் தெரிந்தது.

    *****

    கடந்த காலத்தை ஒரு தொகுப்பில் விவரிக்கும் போது பொதுவாக ஆசிரியர் நேரடியாகச் சொல்வதை விட கதையில் ஒரு பாத்திரத்தின் மூலம் சொல்வது சிறந்தது. தமிழின் முதல் சிறுகதையான வ.வே.சு. ஐயர் எழுதிய ’குளத்தங்கரை அரசமரம்’ கதை இப்படித் தொடங்குகிறது.


    பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்தது மரம்- பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ தொண்ணூறு நூ று வருஷமிருக்கும். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்துங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள். பட்டு பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளை கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ஸ்நானம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவுந்துகொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளை பார்த்து சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்தது.

    *****

    4. கதா பாத்திர வருணணை

    சிறுகதையின் மையப் பாத்திரம் மற்றும் பிற பாத்திரங்கள் படைப்பில் அவற்றின் வெளித்தோற்றமும் உள்மனதும் பற்றிய வருணணை கதைக்கு ஒரு மிக முக்கியமான அம்சம்.

    வீணா: சுஜாதா

    வீணா பிறந்தது 1946-ல். 1956-லிருந்து 1960 வரை அவள் பெற்றோர் டில்லியில் இருந்தபோது சாப்பிட்ட கோதுமையினாலும், அவள் அம்மாவிடமிருந்து பெற்ற நேர்த்தியான மூக்கினாலும், மிக ஒழுங்கான அதரங்களாலும், உயரத்தினாலும், எல்லா அளவுகளும் ஓர் அரை இன்ச் குறைந்து சட்டையை மீறும் உடம்பு வளப்பத்தினாலும் அவள் எதிரே செல்பவரைப் பிரமிக்கவைக்கும் அழகு பெற்றிருந்தாள். எப்படிப்பட்ட பிரமிப்பு? பெட்ரூமில் புலியைப் பார்க்கும் பிரமிப்பு. ஆதாரமான சில உணர்ச்சிகளை வயிற்றில் ஏற்படுத்தும் பிரமிப்பு!
    ...

    சுந்தர் ஒரு சாதாரணன். அவன் உலகம், நீங்கள் கேட்டவை, தீபாவளி மலர், எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களின் உலகம்; செய்தித்தாள்களை நம்பும் உலகம். ‘உங்களுக்குச் சோர்வாக இருக்கிறதா?’ என்று விளம்பரத்தில் கேட்டால், உடனே சோர்வாக உணரும் ஹிப்னோபீடியா சுபாவம். அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த மகத்தான சலனம், வீணாவுடன் ஒரு தடவை பேசியது. மகத்தான தீரச் செயல், அந்தக் கடிதத்தை எழுதியது.

    *****

    அதுசரி, தன்மை நோக்கில் சொல்லும் கதையில் அந்த ’நான்’ பாத்திர வருணணை எப்படி இருக்கவேண்டும்? ’நானே என்’ வெளித்தோற்றத்தை வருணித்துக்கொளவது செயற்கையாக இருக்காதோ? கதையில் என் மனதை, உணர்வுகளை விவரிப்பது இயல்பாக இருக்கும், ஆனால் ’என் வெளித்தோற்றம்?’ தன்மையில் எழுதப் பட்ட ஏராளமான சிறுகதைகள் உள்ளன. படித்தறிந்து பின்னூட்டம் இடுங்கள்.

    சிறுகதையில் உரையாடல், மனவோட்டம் பற்றி வரும் பதிவுகளில்...

    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  10. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    3. சிறுகதையில் உரையாடல்

    ஒரு வரிகூட உரையாடலே இல்லாமல் ஏதேனும் சிறுகதை படித்திருக்கிறீர்களா? அதேபோல் முழுவதும் உரையாடலாகவே எழுதப்பட்ட சிறுகதை? இத்தகைய கதை பற்றி அறிந்தவர்கள் கதைத் தலைப்பு, ஆசிரியர், சுட்டி முதலிய விவரங்களை இங்குப் பதியலாம்.

    கதை மாந்தர்களின் பேச்சாக எழுதப்படும் உரையாடல் அவர்களின் குரலாகக் கதையில் ஒலிக்கிறது. பேச்சு என்பது ஒரு செய்தி அல்லது உணர்ச்சியின் வெளிப்பாடு. அந்த செய்தி அல்லது உணர்ச்சி சொற்களில் வடிக்கப்படும் போது ’ஏறத்தாழ சரியானது’ என்றுதான் சொல்லமுடியும். மனதின் உணர்ச்சிகளையோ, நினைவுகளையோ அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த செய்தியையோ யாராலும் ’முற்றிலும் சரியாகச்’ சொல்ல முடிவதில்லை.

    நடைமுறை வாழ்வில் போலன்றி ஒரு சிறுகதையில் உரையாடல் வெறும் வெட்டிப் பேச்சாக இருக்க முடியாது அல்லவா? எனவே உரையாடல் என்பது கதையின் கூறுகள் பலவற்றை ஒரே சமயத்தில் பார்த்துக்கொள்ளுமாறு எழுத வேண்டுவது அவசியம். உரையாடல் நடை இன்றைய கதையில் பொதுவாக பேச்சுத் தமிழில் அமைந்து பேசும் பாத்திரத்தின் குலம், குணம், வளர்ப்பு இவற்றிற்கேற்ப மாறுபடும்.

    1. உரையாடல் கதையின் மனச்சூழலை (mood) அமைக்கலாம்:

    ’நிஜத்தைத் தேடி’: சுஜாதா


    "யாரு?" என்றான். சற்றுத் திடுக்கிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்தது தன் சோகக் கதையை காப்ஸ்யூல் வடிவத்தில் சொன்னான்: "ஊருக்குப் புதுசுங்க. வேலை தேடி வந்தேங்க .என் மனைவி காலைல இறந்து போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க. எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்" அவன் வைத்திருந்த தட்டில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.

    "வீடு எங்கே" என்றான்.

    "இஙகதான் ஸார் கோகுலா பக்கம். தெரிஞ்சவங்க வீட்டில நிகழ்ந்து போச்சுங்க."

    "சரி அட்ரஸ் சொல்லு."

    "போனாப்போறது எதாவது கொடுத்து அனுப்பிடுங்களேன்" என்றாள் சன்னமாக. "இரு."

    "நான் இங்க பெங்களுர் வந்தே மூணே நாள்தான் ஆவறது ஸார்! காலைல இறந்துட்டா."

    "சரிதாம்பா, அட்ரஸ் என்ன? சொல்லேன்!"

    அவன் சற்றே யோசித்து "மூணாவது கிராஸ்" என்றான்.

    "மூணாவது க்ராஸ்னா? எச்.எம்.ட்டி லே அவுட்டா? சுந்தர் நகரா? இல்லை கோகுலா காலனிக்குள்ளயா?"

    "சொல்லத் தெரியலிங்களே, சினிமா தியேட்டர் பக்கத்தில."

    "அவனோட என்ன வாக்குவாதம்?" "இப்ப நீ சும்மா இருக்கப் போறியா இல்லையா? எந்த சினிமா தியேட்டர்யா?"

    "என்ன ஸார் இப்படி கேக்கறிங்க இருக்கறதே ஒரு சினிமா தியேட்டர் தானே! பேர் தெரியாதா உங்களுக்கு?"

    "எனக்குத் தெரியும். நீ சொல்லு."

    அவன் மறுபடியும் அனுபல்லவியைப் பிடித்தான் "பங்களூர் வந்தே மூணு நாள் ஆவுது ஸார் காலைல இறந்துட்டா."

    "சரிப்பா.எந்த இடம்? அதைச் சொல்ல மாட்டியா?"

    "என்ன ஸார்,பெண்டாட்டி செத்துப் போன துக்கத்தில இருக்கேன், என்ன என்னவோ போலிஸ்காரங்க மாதிரி கேக்கறிங்களே. காசு கொடுக்க முடியும் இல்லைன்னு சொல்லிடுங்க, நான் போவணும். பிணம் கிடக்கு அங்கே!"

    "அட்ரஸ் சரியா சொல்லு தரேன். "

    "அதான் சொன்னேனே."

    "சரியா சொல்லு."

    "அய்யோ" என்றான். "வேண்டாம் ஸார்.என்ன நீங்க..."

    (மேலே கதையில் படித்துக்கொள்ளுங்கள்.)

    *****

    2. உரையாடல் கதையின் கருப்பொருளை (theme) வெளிப்படுத்தலாம்.

    மேலே உள்ள சுஜாதா கதையின் ஆரம்ப உரையாடல் மையப் பாத்திரமும் அவன் மனைவியும் வந்தவன் சொல்லும் செய்தியை நம்புவதா வேண்டாமா என்ற கதையின் கருப்பொருளை வெளிப்படுத்துகிறது. கணவன் நம்ப மறுக்கின்றான். சாவு பற்றிய செய்தியைத் தாங்கி வருபவன் பொய் சொல்லமாட்டான் என்று மனைவி நினைக்கிறாள்.

    *****

    3. முன்கதையை, கடந்த காலத்தை வெளிப்படுத்த, சிறுகதையில் உரையாடல் ஒரு சிறந்த கருவி:

    ’சிலிர்ப்பு’: தி.ஜானகிராமன்

    "யப்பா, யப்பா!"

    "ஏண்டா கண்ணு!"

    "பிச்சி மாமாவுக்கு வந்து, வந்து, தொளாயிர ரூபா சம்பளம். பணக்காரர். இவ்வளவு பணக்காரர்ப்பா!" என்று கையை ஒரு கட வாத்திய அளவுக்கு அகற்றி, மோவாயை நீட்டினான் – குறை சொல்லுகிறாற்போல.

    "அதுக்கு என்ன இப்ப?"

    "வந்து, செத்தே முன்னாடி ஆரஞ்சு கேட்டேனோல்லியோ, வாங்கிக் குடுக்காம எங்கேயோ பாத்துண்டு நின்னார்ப்பா."

    "அவர் காதிலே விழுந்திருக்காது. விழுந்திருந்தா வாங்கியிருப்பார்."

    "நான் இரைஞ்சுதான்பா சொன்னேன்".

    "பின்னே ஏன் வாங்கிக் கொடுக்கலை?" கேள்வியை நானே திருப்பிக் கேட்டுவிட்டேன். பையன் திணறினான்.

    "வந்துப்பா, வந்து, பிச்சி மாமாவை வந்து ஒரு மூணு கால் சைக்கிள் வாங்கித் தான்னேன். வந்து, தரேன் தரேன்னு ஏமாத்திப் பிட்டார்ப்பா…"

    "அவர் என்னத்துக்குடா வாங்கணும்? நான் வாங்கித் தரேன்."

    "நீ எப்படி வாங்கித் தருவியாம்?"

    "ஏன்?"

    "உனக்கு நூறு ரூபாதானே சம்பளம்?"

    "உனக்கு யார் சொன்னா?"

    "வந்து, பிச்சி மாமாதான் சொன்னா."

    "உங்கிட்ட வந்து சொன்னாரா, உங்கப்பாவுக்கு நூறு ரூபாதான் சம்பளம்னு?"

    "வந்து எங்கிட்ட இல்லேப்பா. மாமிகிட்டச் சொன்னா. நீ வந்து மெட்ராஸ்லேந்து லெட்டர் எழுதியிருந்தே பாரு, புள்ளையார் பூஜையன்னிக்கி; அப்பச் சொன்னா மாமிகிட்ட. வெறுமெ வெறுமே நீ மெட்ராஸ் போறியாம். உனக்கு அரணாக்கொடி வாங்க முடியாதாம்."

    இது ஏதுடா ஆபத்து!

    *****

    4. உரையாடல் கதையில் ஒரு பாத்திரத்தின் குணவிசேஷங்களைக் கோடிட்டுக் காட்ட உதவும் ஓர் உத்தி.

    ஒரு பாத்திரத்தின் குணத்தை நேரடியாகச் சொல்வதை விட அதன் மனம், பேச்சு, செயல் மூலம் காட்டுவது ஒரு தேர்ந்த ஆசிரியரின் அடையாளம். சிறுகதையில் எதையும் சொல்வதை விடக் காட்டுவதே மிக இயல்பாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

    தற்குணம் காட்டும் உரையாடல்

    ’காகிதப் பாலங்கள்’: ஜி.எச்.எஸ்.மணியன்

    லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்..."

    "ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன லெட்டர்? என்ன... நாங்கள் சௌக்யம், நீங்கள் சௌக்யமான்னுதானே...!"

    "ஆமாம்மா, எங்க அண்ணாக்கு லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சு; மன்னி வேற ரெண்டு லெட்டர் போட்டுட்டா..."

    "ரெண்டு லெட்டரா?... வொண்ணுதானே காண்பிச்சே?"

    "நேத்திக்கு ஒரு கார்டு வந்ததேம்மா. மிக்ஸி வாங்கிருக்கான்னுகூட எழுதலே?"

    "யாருக்கு ஞாபகம் இருக்கு அதெல்லாம்? ஒங்காத்துலே இருக்கறவா வாரம் பத்து லெட்டர் எழுதறா. என்னமோ நீ இங்கே முள்ளுமேலே இருக்கறதா நெனைப்பு அவங்களுக்கு."

    *****

    பிறர் குணம் காட்டும் உரையாடல்

    ’உஞ்சவிருத்தி’: சுஜாதா

    "ஏன் கேக்கறே... ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டார். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தார். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டார். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டார். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போறேன்னு காலை ஓடிச்சுண்டார். மனசொடிஞ்சு போய்ட்டார். அப்றம்..." என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.

    *****

    சரித்திரக்கதை உரையாடல்

    சரித்திரக்கதைகளில் உரையாடல் பெரும்பாலும் செந்தமிழில் அமையும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

    ’குடிப்பெருமை’: கி.வா.ஜகந்நாதன்

    "என்ன, தாமப்பல் கண்ணனாரே, இன்று சதுரங்க பலம் உம்மிடத்திலே இல்லையே! நான் அரச குலத்திலே பிறந்தவன், சதுரங்க வலியுடையவன்; நான் தான் வெல்கிறேன். உம்முடைய பக்கம் வெற்றி உண்டாக இது தமிழ்க் கவிதை அல்ல", என்று அந்த உற்சாகத்திலே மாவளத்தான் பேசத் தொடங்கினான்.

    "போர்க்களத்துப் படைக்கும் இந்தச் சதுரங்கத்துக்கும் சம்பந்தமே இல்லை. அது வேறு, இது வேறு", என்று புலவர் சொல்லிக் காயை நகர்த்தி வைத்தார்.

    *****

    மனவோட்டம் பற்றி அடுத்த பதிவில்....
     
    Last edited by a moderator: Dec 22, 2014

Share This Page