1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மேலும் சில கதைகள்

Discussion in 'Stories in Regional Languages' started by saidevo, Mar 8, 2013.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    எங்கள் குடும்பத்தில் நான் மற்றும் (இப்போது அமரர்களாக இருக்கும்) என் தம்பி, அம்மா, அப்பா எல்லோருமே எழுத்தாளர்கள்! அப்பாவும் அம்மாவும் ஐம்பது-அறுபதுகளில் ஓரளவுக்குப் பிரபலமான எழுத்தாளர்கள். தம்பி பின்னர் அவர்கள் வாரிசென உருவானான். இவர்களது பிரசுரமான கதைகளைப் பார்க்கும் போது நான் ’கம்பன் வீட்டுக் கட்டுத் தறி’தான். வேடிக்கை என்னவென்றால் நான் இவர்கள் எழுதிய கதைகளைப் பெரும்பாலும் படிக்கவில்லை. இப்போது என் எழுத்து சூடு பிடிக்கும் போது பழைய அச்சுப் பிரதிகளில் என் கைவசம் இருக்கும் அவர்களது கதைகளை இப்போது படிக்க ஆரம்பித்து ஒரு வலைப்பூவில் பதிந்து வருகிறேன். கீழே வருவது ’மறதி’ பற்றி என் தந்தை 1954-ஆம் ஆண்டில் எழுதிய சிறுகதை.

    *****
     
    Loading...

  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுகதை, 15 Jul 1954
    விசித்திர ஜன்மங்கள்: மறதி மன்னர்கள்
    எச். குருமூர்த்தி


    "ன்ன சாமி ஜட்கா கூலி கொடுக்காமல் இப்படி மணிக்கணக்காய் காக்க வைக்கிறீங்களே!"

    ஜட்காவிலிருந்து இறங்கி உள்ளேபோன மனிதர் ஒரு ஈஸிச்சேரில் சாவதானமாகச் சாய்ந்தவாறு "டேய் அம்பி! வாசல்லே யாருன்னு பாருடா!" என்றார்.

    அம்பி போய்ப்பார்த்துவிட்டு, "ஜட்கா வண்டிக்காரன் அப்பா! வண்டிச்சத்தம் கொடுக்கவில்லையாம் நீ" என்றான்.

    "ஏதுடா சத்தம்?"

    "அது தானப்பா! நீ இப்போ ஆஸ்பத்திரிக்குப் போய்வந்தாயே வண்டியில்!"

    "ஆஸ்பத்திரியா?"

    "நம்ம கிரிஜாவுக்குப் பிரசவமாயிருக்கோன்னோ! அவளைப் பார்க்கப் போனாயே அப்பா!"

    "கிரிஜாவா! எப்போ போனா ஆஸ்பத்திரிக்கு!"

    பாவம்! தப்பு அவர்மீது இல்லை. ஞாபகசக்தி அணுவளவும் இல்லாத அவர் மூளை, ஹைட்ரஜன் குண்டு வெடித்து எழுப்பும் புகைபோல் குழம்பிக் கிடக்கிறது!

    கடைசியில் அந்த மறதி ஆசாமி வண்டிக்காரனிடம், "போய்யா! உன் வண்டியில் நான் ஏறவில்லை!" என்று சாதித்தும் விடுகிறார்!

    "ஹூம்! என் குதிரைக்கு இருக்கும் ஞாபகம்கூட இல்லையே உனக்கு", என்று ஜட்காவாலா சபித்துக்கொண்டே போகிறான்.

    ப்படி தன்னையே மறந்து கண்டபடி உளறும் பிரகிருதிகள் நம்மிடையே நூற்றுக்கணக்கில் உலவுகிறார்கள்.

    வெளியில் புறப்படும்போது வாசல் கதவைப் பூட்டாமல் திறந்துபோட்டுச் செல்லும் ஜன்மங்கள், அவசரமாக ஆபீஸுக்கு ஒரு காலில் மட்டும் செருப்பை மாட்டிக்கொண்டு போகும் பிரகிருதிகள், ஏன், ஏதோ ஞாபகத்தில் ஆபீஸுக்குப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டு பஸ் ஸ்டாப் வரை நடந்துசென்று கவனப் பிசகாய் வீட்டுக்குப்போகும் பஸ்ஸில் ஏறி பிரிக்காத டிபன் பொட்டலம், கனத்த ப்ளாஸ்க் இத்யாதியில் பிரசன்னமாகி சகதர்மிணியை திகைக்கவைக்கும் மறதி மன்னர்கள், இப்படி எத்தனையோ பேர்வழிகளை நாம் தினசரி சந்திக்கிறோம்!

    "ஐயையோ! குழம்புக்கு உப்புபோட மறந்துவிட்டேன் போலிருக்கு ஏன்னா! காமல்பற எப்படி சாப்பிட்டேள்" என்று கேட்டாள் பக்கத்து வீட்டுக்கார மனைவி.

    "இல்லையே! நீ உப்புபோட மறக்கவில்லை! நீ கொடுத்தனுப்பிய ப்ளாஸ்க் காப்பியில் இருந்ததே உப்பு!" என்றார் அவள் கணவர்!

    இதைவிட விசித்திரமான தம்பதிகளை ஒரு தரம் நான் சந்திக்க நேரிட்டது.

    "ஏன்னா! காலம்பற உங்களிடம் காபிப்பொடி வாங்க 10-ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டேன் போலிருக்கிறது, ஐந்து ரூபாய் நோட்டுக்குப் பதில்!" என்றாள் மனைவி.

    "நாசமாய்ப் போச்சு! அது ஒரு ரூபாயாக்கும்னு நினைத்து அப்படியே ஆபீஸில் ஒருவனுக்கு அவசரமாக கைமாற்றுக் கடன் கொடுத்தேன். நீ ஏதோ பொடின்னு சொன்ன ஞாபகம் மட்டும் இருந்தது. கையிலிருந்த சில்லறைக்கு சீக்காய் பொடி வாங்கிவந்தேன்" என்றார் கணவர்.

    மனைவி தலையில் அடித்துக்கொண்டாள்! எப்படி இந்த மறதி தம்பதிகள்!

    ழுத்தாளர் ஒருவர் பாவம்! கற்பனையைவிட மறதி அசாத்தியம் அவருக்கு! சகஸ்ரநாமங்களைப் பெற்ற கதாபாத்திரங்களைத் தம் கதையில் சிருஷ்டித்து கதையின் ஆரம்பத்தையே முடிவாக மாற்றிக்கொண்டிருக்கும்போது அவர் மேஜைமேல் காபியை வைத்துவிட்டுச்சென்றாள் மனைவி. எழுத்தாளர் தம் பேனாக் கட்டையை காபி டம்ளரில் முக்கி முக்கி ஒரு விதமாய் கதையை முடித்த சந்தோஷத்தில் ’மடக்’கென்று மை புட்டியிலிருந்த மையை குடித்தாரே பார்க்கணும், காபியாக்கும்னு!

    நாய்க்குட்டியை இழுத்துக்கொண்டு கையில் தொப்பியுடன் ஒருவர் பீச்சுக்கு வந்தார். காற்று வாங்கினார். நாய் சங்கிலியை அவிழ்த்துக்கொண்டு குதித்து விளையாடியது. அந்த வேகத்தில் யதேச்சையாக சங்கிலியின் கொக்கி அவர் மடியிலிருந்த தொப்பியின் தோல் பட்டையில் மாட்டிக்கொண்டது. வீட்டுக்கு எழுந்து போகையில் அவரைக் கண்டு சிரிக்காத பேர்களே இல்லை. ஆம், அந்த மறதி மன்னர் நாயைத் தூக்கித் தலைமீது வைத்துக்கொண்டு தொப்பியை சங்கிலியால் இழுத்தவாறு நடந்து சென்றார்!

    இப்படி எத்தனையோ மறதி வீரர்களை நாம் காணலாம். இவர்களுடன் பழகும்போது சற்று உஷாராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் தைரியமாக ரூ.5, 10 கடன் வாங்கலாம் இவர்களிடம் என்றுமட்டும் கோட்டை கட்டாதீர்கள்! எனென்றால் யாருக்காவது கடன் கொடுத்துவிட்டு கடன் வாங்கியது நீங்கள்தான் என்று வாதாடி கோர்ட்டு டிகிரி வாங்கவும் மறக்க மாட்டார்கள் இம்மறதி மன்னர்கள்!

    *** *** ***
     
    3 people like this.
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    காகிதப் பாலங்கள்
    சாவி, 15 Oct 1980
    காகிதப் பாலங்கள்
    ஜி.எச்.எஸ். மணியன்


    "லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்..."

    "ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன லெட்டர்? என்ன... நாங்கள் சௌக்யம், நீங்கள் சௌக்யமான்னுதானே...!"

    "ஆமாம்மா, எங்க அண்ணாக்கு லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சு; மன்னி வேற ரெண்டு லெட்டர் போட்டுட்டா..."

    "ரெண்டு லெட்டரா?... வொண்ணுதானே காண்பிச்சே?"

    "நேத்திக்கு ஒரு கார்டு வந்ததேம்மா. மிக்ஸி வாங்கிருக்கான்னுகூட எழுதலே?"

    "யாருக்கு ஞாபகம் இருக்கு அதெல்லாம்? ஒங்காத்துலே இருக்கறவா வாரம் பத்து லெட்டர் எழுதறா. என்னமோ நீ இங்கே முள்ளுமேலே இருக்கறதா நெனைப்பு அவங்களுக்கு."

    முள்ளின் மேலே இருப்பது பரவாயில்லே... அன்றைக்கு அப்படித்தான்... கடைத்தெருவுக்குப்போனபோது அவளைப் பார்த்தாள். உம்மிடியார்ஸுக்குப் பக்கத்தில் என்று ஞாபகம். உடம்பின் முக்கால் பகுதியை துணி வெறுமனே விட்டிருந்தது. முள்-படுக்கையில் படுத்திருந்தாள். கண்களில் வெற்றுப் பார்வை. செம்மண் சடைக் கொத்துக்கள். அவள் பக்கத்தில் ஒரு அலுமினியக் குவளை. பழக்கப்படுத்தியே வேதனையை அடக்கிக் கொண்டிருப்பாள் என்று பட்டது.

    இங்கு மனசுதான் ரணமாக்கப்பட்டது. வார்த்தை முட்களாய்... இதுவும் கொஞ்ச நாட்களில் பழக்கமாகி விடும்.

    "எழுதி முடிச்சுட்டியாடி கௌசல்யா?" என்றபடியே ஹாலுக்குள் வந்தாள் அவள் ’அம்மா’... அதாவது, அவளோட அவரின் அம்மா. அவள் இப்படிக் கேட்டதற்கு லெட்டரைப் படித்துக் காட்டேன் என்று அர்த்தம்...

    "கவர்ல எழுதறயா?... கவர் எதுக்கு? ஒரு கார்டுல ரெண்டு வரி எழுதிப்போட்டா பத்தாது? உன் போஸ்டேஜுக்கே மாசா மாசம் தனியா பணம் ஒதுக்கணும் போலிருக்கு. வந்து நீ லெட்டர் எழுதிட்டு இருக்கே... இல்லாட்ட கதை எழுதறேன்னு பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கே!"

    கௌசல்யாவின் விழிக்கடைகளில் நீர் முத்துக்கள் தென்பட்டன. "படிக்கறேம்மா, கேக்கறேளா?"

    "ம்...ம்... பாபுக்கு ரெடியா கரைச்சு வச்சிருக்கியா?"

    "ரெடியா இருக்கும்மா! அது எழுந்திருக்க நாழியாகும். ம்... அன்புள்ள அண்ணாவுக்கு கௌசல்யா அநேக நமஸ்காரம். அப்பா நலமாக வந்து சேர்ந்திருப்பா (எழுதியிருந்தது: அப்பா விவரமெல்லாம் சொல்லியிருப்பார். அவரிடம் சரியாகவே பேச முடியவில்லை.) இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்யம். பாபு... ம்... சமர்த்தாக இருக்கிறது. ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுகிறது. (படிக்காமல் விட்டது: பாபு வரவர முரண்டு பிடிக்கிறது. இந்த வயசிலேயே இத்தனை பிடிவாதம். இவரை அப்படியே உரிச்சு வெச்சிருக்கு.) நிற்க, இவருக்கு ஆபீஸில் ஜாஸ்தி வேலை. எக்ஸாஸ்டட் ஆக வருகிறார். அட்வான்ஸஸ் செக்க்ஷன் பார்க்கிறார். சீ.ஏ.ஐ.ஐ.பி.யில்..." என்று ஆரம்பிததுமே,

    "அதெல்லாம் எதுக்கு எழுதறே? அவன் பெயிலாயிட்டான்னு அப்படியே உங்க வீட்டுக்கு ஒப்பிக்கணுமாக்கும்?"

    "..."

    "சரி சரி, படி! மணி பன்னெண்டாகப் போறது."

    "அக்கௌண்டன்ஸி பாஸ் பண்ணிவிட்டார். அறுபத்தெட்டு மார்க்... ம்... இவருக்கு ப்ரமோஷன் கிடைக்கலாம். (படிக்காமல் விட்டது: அக்கௌண்டன்ஸியை ஜுரத்தோடுபோய் கடனுக்கேன்னு எழுதினார். அவுட்!) நான் நேற்று ஒரு கதை எழுதி முடித்தேன்..."

    "அதை நல்லா எழுது."

    "ஜன்னலைப் பார்த்துண்டே உக்காந்துண்டிருக்கேன். கதை எழுதி பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கேன்னு..."

    "உருப்படியா வேற என்ன பண்றே? இந்த லட்சணத்துலே அப்பா உனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணனும்னு நாயா அலையறார்... அப்பறம் என்ன எழுதி இருக்கே?"

    "இன்னும் அனுப்பவில்லை. அனு எப்படியிருக்கிறாள்? (அவளுக்காவது இந்தமாதிரி பிடுங்கல்கள் இல்லாத... உடனே வேறமாதிரி பிடுங்கல்கள்னு ஜோக் அடிக்காதே.) ஜாதகம் ஏதாவது வந்ததா? சூரியநாராயணின் ஜாதகம் அப்பாவிடம் வாங்கிக்கொள். அடிக்கடி லெட்டர் போடு. (இந்த லெட்டர் ஒண்ணுதான் நமக்கு எல்லாம் ஒரு பாலமா இருக்கு. அது வழியாத்தான் நான் அங்கே வரமுடியும், புரிந்ததா?) அன்புள்ள உன் தங்கை கௌசல்யா ராமச்சந்திரன். பி.கு. மன்னிக்கு என் ரிகார்ட்ஸ்."

    "அவ்வளவுதானா? ஒண்ணு மாத்திரம் சொல்லணும். நீ எழுதற கதையெல்லாம் உன் லெட்டரைவிட சின்னதாத்தான் இருக்கு... கட்டாயமா!"

    "பக்கத்து லெட்டர் பாக்ஸ்ல இதைப் போட்டுட்டு வந்துடறேம்மா!"

    "இருக்கட்டும். அதை அப்படியே அலமாரிலே வை. உங்க அண்ணாவுக்கு, அப்பாகூட ரெண்டு வரி எழுதணும்னு சொன்னார். ஏதோ அந்த ரெண்டாயிரத்தை இப்பவே தந்துடறேன்னு உன் அண்ணா வீராப்புப் பேசினான்? அப்பா எழுதினவுடனே போஸ்ட் பண்ணிக்கலாம்."

    கௌசல்யாவுக்கு இருட்டிக்கொண்டது. லெட்டரில் தான் படிக்காமல் விட்ட வரிகள், மாற்றிப் படித்த வரிகள்... சமாளித்துக்கொண்டு,

    "அப்பாவுக்கு நகச்சுத்தி மாதிரி இருக்குன்னாரே... அவர் சொல்லட்டும், நானே எழுதிடறேன்."

    "சரி சரி..." என்று மாமியார் தலயைச் சாய்த்துக்கொண்டார்.

    கௌசல்யா ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு, தான் நேற்று எழுதி முடித்திருந்த கதையைத் திரும்பப் படிக்க ஆரம்பித்தாள்.

    இந்தக் கதை எழுதுவதுமட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படியிருக்கும் எந்று யோசித்துப் பார்த்தாள்.

    "பேப்பரை வேஸ்ட் பண்ணிக்கிட்டு" என்று மாமியார் இரைந்தது மூளைக்குள் குதித்துக்கொண்டிருந்தது. இருக்கலாம். ஆனால் இந்தக் கதை எழுதறதுதான் அவளுக்கும், ஒரு புது உலகத்திற்குமிடையே பாலம் போட்டுத் தருகிறது.

    அது ஒரு புது உலகங்கூட இல்லை. அது ஒரு அழகான ரோஜாத் தோட்டம்! சின்ன ரோஜாத் தோட்டம்! கற்பனை ரோஜாத் தோட்டந்தான்!

    "ஏ கௌசல்யா! ஆரம்பிச்சுட்டியா, ஜன்னலைப் பார்த்துண்டு ஒக்காந்திருக்கிறதை! போஸ்ட்மேன் எதையோ விட்டெறிஞ்சுட்டுப் போனான். என்னன்னு பாரு...!"

    போஸ்ட்மேன் விட்டெறிந்ததைப் பார்த்தவுடனே... எல்லா நமைச்சல்களையும் மீறிக்கொண்டு சந்தோஷம் குமிழியிட்டது!

    ’இந்த வாரம்’ பத்திரிகை அவளுக்கு வந்திருந்தது, அவளுடைய முதல் கதை பிரசுரமாகி!

    "அம்மா, அம்மா... இதைப் பாருங்களேன். என் கதை வந்திருக்கு! அ..ப்..பா! பகவான் என்னை ஏமாத்தலே..." பத்திரிகையை மார்போடு அணைத்துக்கொண்டாள்.

    "என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோம்மா! அப்பாகிட்டே காட்டணும்! சாயங்காலம் அவர்கிட்ட காட்டணும்!"

    மறுபடியும் கதவு தட்டப்பட்டது. இந்தத் தடவை, "அம்மா, மணியார்டர்"---போஸ்ட்மேன்.

    "யாருக்கு மணியார்டர் போஸ்ட்மேன்? அவருக்குன்னா ஆதரைசேஷன் இருக்கு."

    "மணியார்டர் உங்களுக்குத்தாம்மா! நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களா? ஒரு செவண்டிஃபைவ் ருபிஸ் வந்திருக்கும்மா, ’இந்த வாரம்’ பத்திரிகையிலிருந்து."

    சந்தோஷம் பிரவாகமெடுத்தது. கைவிரல்கள் லேசாக நடுங்கின. தாழ்ப்பாளைப் பிடித்துக்கொண்டாள்.

    "இந்தாங்கம்மா. எனக்கு ரொம்ப சந்தோஷம்மா... நான் லெட்டர்ஸ் போடற லொகாலிட்டிலே ஒரு எழுத்தாளர் அம்மா இருக்காங்கன்னா எனக்கு சந்தோஷம் இல்லீங்களா? வரேம்மா... நெறைய எழுதிக்கிட்டே இருங்க."

    ’ஆகட்டும்’ பாணியில் தலையாட்டத்தான் முடிந்தது.

    "அங்கே யாருகூட அரட்டை கௌசல்யா?"

    "அம்மா! இதோ பாருங்கம்மா, இப்ப பிரசுரமாச்சுல்லே கதை, அதுக்கு சன்மானம் அனுப்பிச்சிருக்காம்மா... எழுபத்தஞ்சு ரூபா!"

    ’அம்மா’ எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

    "என்னோட மொதல் கதைம்மா இது, நமஸ்காரம் பண்ணிக்கறேன்..."

    கௌசல்யா குனிந்து பின்னல் தரையில் புரள, கால் கட்டை விரல் சொடக்கிடச் சேவித்தாள்.

    "பணம் கொடுப்பாளா இதுக்கெல்லாம்? அப்பன்னா நீ நெறைய எழுதலாமே! இப்படி ஜன்னலைப் பார்த்துண்டு ஒக்காந்திருக்கற நேரத்துக்கு... பாபு வேற தூங்கிண்டிருக்கு... எவ்ளோ இது?"

    "எழுபத்தஞ்சு ரூபாம்மா!"

    கௌசல்யா நிமிர்ந்து மாமியாரைப் பார்த்தாள்.

    அவளுக்கும், தனக்கும் உள்ள உறவில் புதிதாக ஒரு பாலம் தென்பட்டது.

    அதுவும் காகிதப் பாலம்தான்!

    *** *** ***
     
    3 people like this.
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    முதல் பக்கத்திலேயே முடியும் கதைகள்
    ஜி.எச்.எஸ்.மணியன்
    இதயம் பேசுகிறது, 27/07/1980


    வெறும் எஸ்.எஸ்.எல்.சி.யோடு படிப்பை நிறுத்திக்கொண்டது தப்பாகப் பட்டது. அதற்கு மேலும் படிக்காதது ஒரு விதத்தில் சரி என்றும் பட்டது. படித்துதான் என்னத்தை சாதித்து விட்டான்?

    "அம்மா, போய்ட்டு வரேன்..."

    "ஜாக்கிரதையாப் போய்ட்டு வாடா.. பாத்து...நன்னா பண்ணிட்டுவா..."

    அம்மாவின் டேப்-ரெகார்டட் வசனங்கள்...ஏதோ டெஸ்டிமோனியலை மறந்துவிட்டதாகப் பட்டது. அவசரம் அவசரமாக அலமாரியைக் குடைந்துகொண்டிருந்தான். அந்த அலமாரியின் நான்கு தட்டுகளில் ஒரு தட்டில், அதுவும் கீழ்த்தட்டில் ஒரு பாதிதான் அவனுக்குப் பாத்யதையான ஒரே இடம். அதுவும் இப்போதைக்கு...

    சிவராமன் அலமாரியைக் குடைந்து துவம்சம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு,

    "அம்மா, போய்ட்டு வரேன்..." எழுந்தது.

    "டீ சாரு, மறக்காம மாமாக்கு போன் பண்ணுடி..."

    "ப்ச்... பார்க்கலாம்... ஒண்ணும் ப்ராமிஸ் பண்ண முடியாது. லைன் கெடைச்சா பண்ணறேன். பத்மாக்கு வேற பண்ணனும். ஏதோ புதுசா ஸாரி வாங்கிக்கோன்னு சொன்னா... டீடெல்ஸ் கேக்கணும். டேஞ்சூர் லைனே கஷ்டமாருக்கு."

    "அப்படியே மாமாக்கும் பண்ணும்மா, சமத்து, என் ராஜாத்தி!"

    "சரிசரி அனத்தாதே.. ஹார்லிஸைக் கொண்டா. நாழியாச்சு. என்னோட புது ஸாரிக்கு... ஃபால்ஸ் அடிச்சாச்சா? நேத்திக்கே சொன்னேனே?"

    அம்மா சமையற்கட்டுக்கு அவசரமாக ஓடிப்போய் ப்ளாஸ்க்கை எடுத்துவந்து சாருவின் கூடையில் வைத்தாள். கதகதப்பாக ஹார்லிக்ஸ்... இது போன உடனே குடிக்க. அப்புறம் எக்ஸ்சேஞ்சில் தனியாக காப்பி வரவழைத்துக் கொள்வாள்.

    "டேய் சிவா! இன்னிக்கு என் ஃப்ரென்ட்ஸ் ரெண்டு பேரு வருவா. வீட்டைக் கொஞ்சம் ஒழிச்சு வைடா. அப்படியே ஈவ்னிங் ஸாரி ஃபால்ஸ் வாங்கிண்டு வந்துடுடா. கலரெல்லாம் அம்மாகிட்டே சொல்லிருக்கேன். வரப்ப, அப்ஸராலேருந்து க்யூடெக்ஸ்... என்ன?"

    "டீ, அவனுக்கு இன்னிக்கு ஏதோ இண்டர்வ்யூடீ. நேரம் கிடைக்காது, பாவம்."

    "ஆமா, பெரிய்ய இண்டர்வ்யூ..." தோள்பட்டையில் முகத்தை இடித்துவிட்டு, ஹைஹீல்ஸை மாட்டிக்கொண்டு, மாமா வாங்கிக்கொடுத்த சிங்கப்பூர் குடையை விரித்துக்கொண்டு சாரு கிளம்பினாள்.

    அவனுக்குப் பின்னாள் மூன்று வருஷங்கள் கழித்துப் பிறந்தவள்...

    போன வருஷம் ஏதோ எஸ்.எஸ்.எல்.ஸி.யில் ஓஹோன்னு மார்க் வாங்கிட்ட புண்யத்துல டெலிபோன் ஆபரேட்டராக உத்தியோகம் கிடைத்துவிட்டது. வேலைக்குப் போய் அகங்காரத்தைத்தான் நெறைய சம்பாதிக்கிறாள்.

    "சாரு, சாரு... மாறக்காம மாமாக்கு போன் பண்ணும்மா, சமத்துல்லே..." -- அம்மா தெருவரை ’சமத்துல்லே’ பல்லவியைப் பாடிக்கொண்டு வந்தாள். எல்லாம் ஓசி ’கால்’ தானே! காஷ்மீர்லேந்து கன்யாகுமரி வரைக்கும் போன் பண்ண முடியுங்கற ஜம்பம் வேறு!... அதுதான் அம்மாவுக்கு சாருவின் மேல் அத்தனை கரிசனம். ஓசி ’கால்’ உபயம். வாரா வாராம் பம்பாயில் இருக்கும் மாமாவுக்கு போன்... மாமாவும் குழைந்து குழைந்து பேசுவார்... என்ன அப்படிப் பேசிடப் போறார்!... சிவா இன்னும் ஆத்துலதான் உட்கார்ந்துண்டு இருக்கானா? வேறு என்ன பேசப் போறார்?

    மதுரைச் சித்திக்கு... மெட்ராஸ்லே பெரியம்மா பொண்ணுக்கு. இல்லாட்ட இருக்கவே இருக்கா ஃப்ரெண்ட்ஸ்...

    பேன்ட் லேசாக ஈரமாக இருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது.

    எல்லாம் காய்ந்துவிடும். இப்போ அடிக்கற வெயில்லே, அப்படியே நனைச்ச பேன்ட் போட்டுண்டு போனாக்கூட சீக்கிரமே காய்ஞ்சு போயிடும்.

    "அம்மா, நான் வரேம்மா..."

    "சரி, பார்த்துப் பண்ணிட்டு வா..."

    ’நான்தான் ஒரு ஏழெட்டு தரமாவது அறுந்து ஹிட் பண்ணிட்டேனே... எனக்கு ரெஸ்ட் கொடுத்தா என்னவாம்’ என்று முகத்தில் அறைந்தாற் போலக் கேட்கும் செருப்பு!

    பன்னிரண்டாம் நம்பர் வீட்டுப் பெண் எதிர்ப்பட்டாள். ஈரக் கூந்தலை முடிந்திருந்தாள். பட்டுப் புடவை ’ஸ்விஷ்.. ஸ்விஷ்..’ என்றது. ஸ்டேட் பேங்க்கில் உத்தியோகம். ஏதோ எல்லாமே பெண்களுக்குத்தான் உத்தியோகம் தருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது போலப் பட்டது அவனுக்கு.

    "சரிசரி நீ பாத்துப் போய்ட்டுவா..." என்று சொல்லிவிட்டு, "ஏண்டீ, ஒங்காத்து கல்பனா குளிச்சிண்டிருக்காளா?" என்று யாரையோ ஆதங்கமாக விசாரித்துக்கொண்டிருந்த அவள் மாமியார் சட்டென்று சிவராமனைப் பார்த்துவிட்டு,

    "ஏண்டா சிவா... இன்டர்வ்யூவா? பார்த்து நன்னா பண்ணிட்டுவா... எங்காத்து வனஜா ஒனக்குப் பின்னாடிதான் படிப்பை முடிச்சா... இப்ப ஆபீஸரா இருக்கா. ஏன், ஒங்காத்லேயே சாரு இல்லையா? என்னமோடாப்பா..." என்று அங்கலாய்த்தாள்.


    முனிசிபாலிடி ப்யூன் ஒருவன் வந்து அவர்களை அழைத்து விட்டுப் போனான். ’அல்லாரும் மொதல்ல ஹெட்கிளார்க்கைப் பார்த்துட்டுப் போகணும்’ என்ற உத்திரவோடு.

    இந்த வேலை தனக்கு எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். உத்தியோகம் ஏதோ வெளியில் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. என்ன பெரிய உத்தியோகம்? ஒவ்வொரு தெருவிலும் உள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை ’சுவடே தெரியாமல்’ அழித்துவிட்டு மொட்டையாக எழுத வேண்டும்! ஜாதி ஒழிப்புக்காகப் போராடிய ஒரு பெரியவரின் பிறந்தநாள் விழாவை அந்த முனிசிபாலிடி விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

    ஹெட்கிளார்க் வந்திருந்தவர்களின் ’எஸ்.எஸ்.எல்.சி.’ புத்தகங்களை வாங்கிப் பார்த்தார். அதோடு சரி. சிவராமன் அவரிடம் ’டெஸ்டிமோனியல்ஸ், ப்ரீவியஸ் எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிகேட்’ என்று கதம்பமாக நீட்டினான்.

    ஒரு மணி நேரத்தில் செலக்ட் ஆனவர்களின் பெயர்களை டைப் பண்ணி ஒட்டினார்கள்.

    "என்ன ஹெட்கிளார்க் ஸார்... நா நல்லாத்தானே பண்ணியிருந்தேன். என் பேரு லிஸ்ட்லே காணுமே?"

    "சிவராமன், உன்னோட ’எஸ்.எஸ்.எல்.சி.’ புக்கைப் பிரிச்சுப் பாரு. அதுலேதான் கோளாறு எல்லாம்..."

    ’ஒண்ணுமே புரியலை ஸார்’, என்ற பாணியில் ஹெட்கிளார்க்கைப் பார்த்தான்.

    அவரும் விடாமல், "அட யாருப்பா, விவரந் தெரியாத பிள்ளையா இருக்கே... எஸ்.எஸ்.எல்.சி. புக்கோட மொதப் பக்கத்தை நல்லா பாரு..."

    எல்லாக் கதைகளும் முதல் பக்கத்தில்தான் ஆரம்பிக்கின்றன.

    சில கதைகள் முதல் பக்கத்திலேயே முடிந்து விடுகின்றன. வாழ்க்கையும் அப்படித்தான் போலிருக்கிறது.

    *** *** ***
     
    1 person likes this.
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    மேலும் சில கதைகள்

    வாழ வைத்தவள்
    உமா குருமூர்த்தி
    (1.9.1954)


    1950-களில் வெளிவந்த ஜனரஞ்சகமான குடும்பச் சிறுகதைகள் பல இன்றைய சூழலில் 'சென்டிமென்டல்'-ஆகத் தோன்றலாம். ஆயினும் அந்நாட்களில் அவை வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தன.

    மறைந்த என் அன்னையார் எழுதி 1.9.1954 இதழில் (பத்திரிகையின் பெயர் தெரியவில்லை) வெளிவந்ததொரு சிறுகதையின் அச்சு நகலை அலகிட்டு கணினிப் படக்கோப்புகளாக இங்குத் தரவேற்றம் செய்துள்ளேன். வாசகர்களின் பின்னூட்டங்களை இந்த இழையிலேயே பதியலாம்.

    --ரமணி, 16/04/2013

    கதையின் படக்கோப்புகளை இங்கு மீண்டும் தரவேற்றிக் கணினியின் had-disk-space-ஐ வீணாக்குவது சரியல்ல என்படால், இந்தச் சிறுகதையைக் கீழ்வரும் சுட்டியில் படித்துக்கொள்ளவும்.

    மேலும் சில கதைகள்
     
  6. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Good Stories. All Varieties.
     
    1 person likes this.

Share This Page