அன்பு... சாந்தம்... ஸ்ரீசாரதா தேவி..! {ஆன்மிகம்}

Discussion in 'Religious places & Spiritual people' started by bharathymanian, Dec 13, 2014.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    அன்பு... சாந்தம்... ஸ்ரீசாரதா தேவி..!ஸ்ரீசாரதாதேவி ஜயந்தி: டிச.13 {Article pub. in "Sakthi Vikatan" dedicated on this day.}

    எஸ்.கண்ணன்கோபாலன்.

    =====================================================

    ''நீ என்னுடைய மனைவி என்ற நிலையில், உன்னுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டியது என்னுடைய கடமையாகிறது. நான் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்று, ஒரு சராசரிப் பெண்ணாக நீ விரும்புகிறாயா? அல்லது, என்னுடைய ஆன்மிக சாதனைகளுக்குத் துணையாக இருக்க விரும்புகிறாயா?
    நான் உன்னுடன் இல்லறம் நடத்தவேண்டும் என்று நீ விரும்பினால், காலப்போக்கில் நீ ஒருசில குழந்தைகளுக்கு வேண்டுமானால் தாயாகக் கூடும். ஆனால், எனது ஆன்மிக சாதனைகளுக்குத் துணையாக இருக்க விரும்பினால், காலமெல்லாம் இந்த உலகத்தில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் உன்னை, 'அம்மா’ என்று அழைப்பார்கள். நீ எதை விரும்புகிறாய்?'' என்று கேட்டார் கணவர்.

    ''நான் உங்களுடைய ஆன்மிக சாதனைகளுக்குத் துணையாக இருக்கத்தான் வந்தேனே தவிர, வேறு எந்த விருப்பமும் எனக்கு இல்லை'' என்று சொன்னார் மனைவி.

    அந்தக் கணவர்தான், ஞானத் தேடலில் தம்மிடம் வந்த நரேந்திரனை, சுவாமி விவேகானந்தராகப் பரிமளிக்கச் செய்து, அவர் மூலமாக நம்முடைய இந்து தர்மத்தின் பெருமைகளை உலகமெல்லாம் முழங்கச் செய்த குருதேவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். அவரின் ஆன்மிக சாதனை களுக்குத் துணையாக நின்ற அவரின் மனைவி, அன்பும் சாந்தமுமே வடிவாகி வந்த அன்னை ஸ்ரீசாரதாதேவி.

    மேற்கு வங்காளம் - பாங்குரா மாவட்டத்தில், ஜெயராம்பாடி எனும் கிராமத்தில் ராமசந்திர முகர்ஜி என்பவர், தன் மனைவி சியாமா சுந்தரியுடன் வசித்து வந்தார். பூணூல்களைத் தயார் செய்து, அவற்றை விற்று வரும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பம் நடைபெற்றது. ஒருநாள், குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கல்கத்தா செல்ல முடிவு செய்தார் ராமசந்திர முகர்ஜி.

    [​IMG]







    அன்று இரவு அவர் ஒரு கனவு கண்டார். சர்வாபரண பூஷிதையாகத் தோன்றிய ஓர் அழகான குழந்தை, தன் தளிர்க்கரங்களால் அவருடைய கழுத்தைக் கட்டிக்கொள்கிறது. அதுவரை அப்படியொரு தெய்விக அழகுடன் திகழ்ந்த குழந்தையைப் பார்த்திருக்காத ராமசந்திர முகர்ஜி அந்தக் குழந்தையைப் பார்த்து, ''நீ யார்? உன் பெயர் என்ன?'' என்று கேட்டார். அந்தக் குழந்தை பதில் எதுவும் சொல்லாமல், ''இதோ, நான் உன்னிடமே வந்துவிட்டேன்'' என்று சொல்லிக் கலகலவென்று சிரித்தது. தான் கல்கத்தா செல்வதற்கு அந்தத் திருமகள்தான் கனவில் வந்து உத்தரவு கொடுத்துவிட்டதாக நினைத்துக்கொண்டார் ராமசந்திர முகர்ஜி.
    அவர் கல்கத்தா சென்றதுமே, சியாமாசுந்தரி சிகோரி என்ற ஊரில் இருந்த தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாள். ஒருநாள் மாலை வேளையில், ஊருக்கு வெளியில் இருந்த ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தபோது, அவளுக்கும் ஓர் அதிசய அனுபவம் ஏற்பட்டது.மரத்தின் கிளையில் இருந்து சறுக்கிக்கொண்டு வந்த ஒரு சிறுமி, சியாமாசுந்தரியின் கழுத்தைத் தன் மலர்க் கரங்களால் இறுக்கிக் கட்டிக் கொண்டாள். சாட்சாத் அம்பிகையின் குழந்தை வடிவம் என்று சொல்லும்படியாக பிரகாசமான அழகுடன் திகழ்ந்த அந்தக் குழந்தை, சியாமாசுந்தரியைப் பார்த்து, ''இதோ, நான் உன்னிடம் வந்துவிட்டேன்'' என்று சொல்லிச் சிரித்தது. சியாமாசுந்தரி அப்படியே மயங்கிச் சரிந்துவிட்டாள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ, அவளுக்கே தெரியாது. தேடி வந்த அவளுடைய உறவினர்கள், மயங்கிக் கிடந்தவளை வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். சற்று நேரத்தில் கண்விழித்த சியாமா சுந்தரிக்கு, ஏனோ அந்தக் குழந்தை தன் வயிற்றுக் குள் சென்று தங்கிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. சில நாட்களில், கல்கத்தாவில் இருந்து வந்த கணவரிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினாள். அவரும் முன்பு தான் கண்ட கனவைக் கூறினார். அப்போதுதான், அந்த அம்பிகையின் அருளால் தங்களுக்கு ஒரு தெய்விகக் குழந்தை பிறக்கப்போகிறது என்பது புரிந்தது. அந்த நாளை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். 1853ம் வருடம் டிசம்பர் மாதம் 22ம் தேதி, அதாவது தெய்விக மாதமான மார்கழி மாதத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஜாதகப்படி, 'இறைவனுக்குப் பிரியமானவள்’ என்ற பொருளில் 'டாகுர்மணி’ என்ற பெயர் சூட்டப்பட்டது. 'அனைவருக்கும் நன்மை அருள்பவள்’ என்ற பொருளில், தன் செல்லக்குழந்தைக்கு 'க்ஷேமங்கரி’ என்று பெயர் சூட்டினாள் குழந்தையின் தாய் சியாமா. அந்த இரண்டு பெயர்களுமே குழந்தைக்கு நிலைக்கவில்லை.
    [​IMG]சியாமாசுந்தரியின் தங்கை, இறந்து விட்ட தன் பெண் குழந்தை "சாரதாவின்" பெயரை வைக்குமாறும், அப்படிச் செய்தால் தன்னுடைய குழந்தை அக்கா வீட்டில் வளர்வதாக நினைத்து தான் ஆறுதல் கொள்ளமுடியும் என்றும் கேட்டுக் கொள்ளவே, சியாமாசுந்தரியும் தன் குழந்தைக்கு சாரதா என்று பெயர் சூட்டினாள்.
    குழந்தைப் பருவத்தில் இருந்தே தெய்விக சிந்தனைகளிலேயே லயித்திருப்பது சாரதையின் வழக்கமானது. இது, திருமணம் என்ற பெயரில் ஸ்ரீராமகிருஷ்ணருடன் இணைந்த ஸ்ரீசாரதாதேவி, அவரின் ஆன்மிக சாதனைகளில் தம்மையும் ஈடுபடுத்திக்கொள்ள பேருதவியாக அமைந்தது.

    ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதாதேவி இருவருமே ஆன்மிகத்தில் உயர் நிலையை அடைந்திருந்தாலும், ஸ்ரீசாரதாதேவிக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. காரணம், தாய்மைக்கே உரியதான அன்பு, சாந்தம், கருணை போன்ற குணங்களின் ஒட்டுமொத்த வடிவமல்லவா அவர்?! அவரின் இதயத்தில் பூரண பொலிவுடன் திகழ்ந்த தாய்மையின் விளைவாக நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இங்கே பார்க்கலாம்.

    சாரதா தேவியார் தாம் தங்கியிருந்த இடத்தில் இருந்து தினசரி குருதேவருக்கான உணவைச் சமைத்து எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள், எதிரில் வந்த ஒரு பெண்மணி, ''அம்மா, இன்று ஒருநாள் மட்டும் குருதேவருக்கு உணவு எடுத்துச் செல்லும் பேற்றினை எனக்கு வழங்குங்கள்'' என்று கேட்டுக்கொண்டாள். தேவியாரும், தாம் கொண்டு வந்த உணவுப் பாத்திரத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, குருதேவரின் அறைக்கு அழைத்துச் சென்றார். அறையில் உணவை வைத்துவிட்டு அந்தப் பெண் வெளியில் சென்றதும், குருதேவருக்குத் தட்டில் உணவைப் பரிமாறிவிட்டு, அருகில் விசிறியபடி இருந்தார் அன்னை.
    அவரிடம் குருதேவர், ''அந்தப் பெண் ஒழுக்கம்
    கெட்டவள் என்பது உனக்குத் தெரியாதா? அவளுடைய கை பட்ட உணவை நான் எப்படிச் சாப்பிடுவது?'' என்று கேட்டார்; தொடர்ந்து, ''உனக்காக இன்று மட்டும் இதைச் சாப்பிடுகிறேன். ஆனால், இனிமேல் நீ எனக்குக் கொண்டு வரும் உணவைக் கண்டவர்களிடம் அளிப்பது இல்லை என்று எனக்கு உறுதி மொழி தரவேண்டும்'' என்றார்.

    அதைக் கேட்ட அன்னை தம்முடைய கையில் இருந்த விசிறியைக் கீழே வைத்துவிட்டு, கண்ணீர் பெருகக் கரங்களைக் கூப்பி வணங்கியவராக, 'தயவுசெய்து என்னை மன்னியுங்கள். கூடுமானவரை உங்களுக்கான உணவை நானே கொண்டு வர முயல்கிறேன். ஆனால், வழியில் யாராவது என்னைப் பார்த்து, 'அம்மா’ என்று அழைத்து எதையேனும் கேட்டால், அதை என்னால் மறுக்கமுடியாது. மேலும், தாங்கள் எனக்கு மட்டும் இல்லாமல் எல்லோருக்குமே குருதேவர் அல்லவா?'' என்று கேட்டார்.
    இதுதான் தாய்மைக்கே உரியதான உயர்பண்பு! குருதேவரும் அன்னையிடம் இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தார். தாய்மையின் இந்த உயரிய பண்பையே, ஸ்ரீஆதிசங்கரர் தமது 'தேவி அபராத க்ஷமாபன’ ஸ்தோத்திரத்தில் ... 'குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி:’ என்கிறார்என்கிறார்.
    'உலகத்தில் கெட்ட மகன் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, கெட்ட தாய் இருக்கமுடியாது’ என்பதுதான் இதன் பொருள்.
    அன்னையின் மனமானது தாய்மையின் பூரணத்துவம் கொண்டு விளங்கியதன் காரண மாக, சிலநேரங்களில் குருதேவரிடமே மறுத்துப் பேசியிருக்கிறார். அப்படி ஒரு நிகழ்ச்சிதான் இது.

    குருதேவரின் மகிமைகளை அறிந்துகொண்ட இளைஞர்கள் பலர் ஆன்மிக தாகம் கொண்டவர்களாக குருதேவரிடம் வரத் தொடங்கினார்கள். சில நாள்களில் தட்சிணேசுவரத்திலேயே தங்கி, இரவிலும்கூட தியானம் செய்வது, ஜபம் செய்வது என்று தங்களை ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுத்திக் கொண்டார்கள். இரவு வேளைகளில் அதிக அளவு உண்பது ஆன்மிக சாதனைக்குத் தடையாக இருக்கும் என்பதால், ஒவ்வொருவரின் சக்திக்கு ஏற்ப இத்தனை சப்பாத்திதான் சாப்பிட வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தியிருந்தார் குருதேவர். ஒருநாள், அவர் பாபுராம் என்பவரிடம், ''நீ இரவில் எத்தனை சப்பாத்திகள் சாப்பிடுகிறாய்?'' என்று கேட்டார். ''ஐந்து அல்லது ஆறு சாப்பிடுகிறேன்'' என்றார் பாபுராம். ''இது மிகவும் அதிகம். ஏன் இத்தனை சப்பாத்தி சாப்பிடுகிறாய்?'' என்று குருதேவர் கேட்க, ''அன்னை எனக்குத் தருவதை அப்படியே சாப்பிடுகிறேன்'' என்றார் பாபுராம்.

    [​IMG]







    உடனே அன்னை இருக்கும் இடத்துக்குச் சென்ற குருதேவர், 'அளவுக்கு மீறி உண்ணக் கொடுப்பது அவர்களின் ஆன்மிக சாதனைகளை பாதிக்கும் என்று உனக்குத் தெரியாதா?' என்று கேட்டார். அதற்கு அன்னை, ''பாபுராம் இரண்டு சப்பாத்தி அதிகம் சாப்பிட்டான் என்பதற்காக, ஏன் இப்படி கவலைப்படுகிறீகள்? அவர்கள் எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களின் நலனை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்றார் உறுதியான குரலில்.ஸ்ரீராமகிருஷ்ணரையே தம் வாழ்வின் அனைத்துமாகக் கொண்டவர் அன்னை. அவர் தம்முடைய தாய்மை அன்பையும் குருநிலை யையும் அறிந்திருந்தபடியால்தான், குருதேவரால் ஈசுவர கோடிகள் என்று போற்றப்பட்ட பாபுராம் போன்றவர்களின் ஆன்ம நலனை தாம் கவனித்துக் கொள்வதாகக் கூறினார். அந்த அளவுக்கு அன்னை யிடம் தாய்மை என்னும் தனிப்பெரும் தத்துவம் பொலிந்து தோன்றுவதை அறிந்திருந்தபடியால், ஸ்ரீராமகிருஷ்ணரும் அன்னை சொன்னதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.

    ''எல்லா நாடுகளைவிடவும் நம் நாடு ஏன் இவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறது? நாம் ஏன் இப்படி பலவீனமாக இருக்கிறோம்? காரணம், நாம் சக்தியை மதித்துப் போற்றாததுதான். அந்த அற்புதச் சக்தியை மீண்டும் மலர்த்துவதற்கே அன்னை ஸ்ரீசாரதா தேவியார் அவதரித்துள்ளார். இன்று அவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க வில்லை. ஆனால், போகப்போக எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்!'' என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதும் சரி... காலப்போக்கில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் சாரதா தேவியாரைத் தங்களின் தாயாக ஏற்றுக் கொள்வார்கள் என்று குருதேவர் கூறியதும் சரி... இன்றைக்கு எத்தனை நிதர்சனமாகிவிட்டது?!
    அன்னை ஸ்ரீசாரதாதேவி, தம்முடைய தனிப்பெரும் கருணைத்திறத்தினால், நம்முடைய மனங்களில் எல்லாம் அன்பும் சாந்தியும் நிலவச் செய்வாராக!
     
    Loading...

Share This Page