கருவிலே தொடங்குகிறது போராட்டம்

அதில் வெற்றி பெற்றால் தான் புவிப்ரவேசம்
அதன் பின் முட்டி மோதி குப்புறத்தல்
தலை தூக்கிப் பார்க்க பின்னுமொரு போராட்டம்!
நீச்சலடித்து முன்னேற முயன்றால் தானே
பின்னால் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடமுடியும்!
தவழ்ந்து தவழ்ந்து முட்டி தேய்ந்த பின்
தத்தித் தத்தி தளர் நடைக்குப் பிரயத்தனம்.
ஈரிரு திங்கள் முடியுமுன் எத்தனை சோதனைகள்?
எடுக்கும் தடுப்பூசிகள்தான் எத்தனை எத்தனை?
இவற்றின் நடுவில் வரும் நோய்கள் எத்தனை?
அவை குணமாக எத்தனை வண்ண மருந்து மாத்திரைகள்?
இத்தனை சோதனைகளை எல்லாம் கடந்து
மூன்று வயது முடியுமுன்னே நல்லதொரு விளையாட்டுப்
பள்ளிதனிலே சேர்த்திடவே முதல் நேர்முகத் தேர்வு!
மழலைப் பருவத்தைக் கடக்கு முன்னே எத்தனை போராட்டம்!
ஆங்கிலப் பள்ளியில் சேர அடுக்கடுக்காய்ப் போராட்டம்
இருநூறு இடத்திற்கு பத்துநூறு மழலைகள் போட்டியிடும் பரிதாபம்
தேர்விலே வெற்றி பெற்றாலும் கட்டிட நிதி, காப்பீட்டு நிதி என்று
காசைப் பல வழியில் பறிக்கின்ற பரிதாபம்!
தடைகளை எல்லாம் கடந்து பள்ளிப்படிப்பை முடித்தாலோ
கல்லூரியில் கால்பதிக்க கடுமையான போராட்டம்!
இட ஒதுக்கீடென்று சொல்லித் திறமையைப் புறந்தள்ளல்
ஐயகோ என் சொல்வேன் மாணவர்கள் படும்பாடு!
எப்பாடோ பட்டுக் கல்லூரியில் இடம் பிடித்தபின்
பொறியியல் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலும்
முதலாண்டு மாணவர்கள் மூத்த மாணவர்களால்
ராகிங் என்ற பெயரால் படும்பாடு எத்தனை!
படித்து முடிததபின் முடிந்ததா போராட்டம்?
நல்லதோர் வேலை தேடி நாளும் போராட்டம்!
பணியிலமர்ந்தபின் தக்க வைத்துக் கொள்ளப் போராட்டம்!
சிலருக்கு வாழ்க்கையே போராட்டம் பலருக்கு போராட்டமே வாழ்க்கை!

