ராஜ் தாக்கரேவால் 3,000 புனே இன்போசிஸ் ஊழியர்கள் சென்னைக்கு மாற்றம்!
புனே: புனே நகரில் திட்டமிட்டபடி புதிய அலுவலக கட்டடங்களை கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து இன்போசிஸ் தனது 3,000 பிபிஓ ஊழியர்களை சென்னைக்கு இடம் மாற்றியுள்ளது.
கட்டடப் பணிகள் தாமதமானதற்கு ராஜ் தாக்கரேவின் மிரட்டல்களும் அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களும் மகாராஷ்டிரத்தைவிட்டு வெளியேறியதே காரணமாகும்.
இன்போசிஸ் நிறுவனத்துக்கு புனேவில் மிக பிரமாண்டமான வளாகம் உள்ளது. ஹின்ஜவாடி என்ற இடத்தில் மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த வளாகம் தான் இந்தியாவில் உள்ள இன்போசிஸ் வளாகங்களிலேயே மிகப் பெரியது.
இங்கு மேலும் 30,000 பேரை பணியமர்த்தும் வகையில், இரண்டாவது கட்ட அலுவலக கட்டங்களை இன்போசிஸ் நிர்மாணித்து வருகிறது. இந்தப் பணிகள் தான் இப்போது பாதியில் நின்று போய்விட்டன.
இதுகுறித்து அந்நிறுவன இயக்குனர் எச்.ஆர்.மோகன்தாஸ் பாய் கூறியதாவது:
தற்போது ஹின்ஜவாடியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியில் ஏராளமான வட இந்திய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் அமைப்பினர் போராட்டம் நடத்துவதால், தொழிலாளர்கள் பீதி அடைந்து வேலைகளை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதனால் கட்டுப்பானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கு அமைக்கப்பட உள்ள கட்டடத்தில் சுமார் 30,000 பேர் பணியாற்ற முடியும். ஆனால், திட்டமிட்டபடி பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இங்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இடமில்லை.
இதையடுத்து புனே அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை எங்களது வேறு கிளைகளுக்கு மாற்றி வருகிறோம்.
அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட 3,000 பணியாளர்களை சென்னைக்கு மாற்றியுள்ளோம் என்றார்.