தன்னலமற்று பொதுநலத்துக்கு என வாழ்பவர்கள் மிக சிலரே. சுதந்திர போராட்ட நேரத்தில் வாழ்ந்த தியாகிகள் பலரை வரலாறுகள் மூலம் கண்டுணர்ந்துள்ளோம். அன்னை தெரசா, மேதா பட்கர் வரிசையில் இப்போது பலருக்கும் அறிமுகமாகிருப்பது நம் தமிழகத்தை சேர்ந்த டிராபிக் ராமசாமி.
'எப்போடா அம்பத்தெட்டு வயசாகும் நிம்மதியா வீட்டுல ஓய்வெடுக்கலாம்' என்பது தான் வேலைக்கு போகும் பலரது கனவு. தனது எழுபத்தி மூன்றாம் வயதில் தான் நேசிக்கும் சென்னை நகரம் ஒரு தூய்மையான நகராக மாற வேண்டும் என நடு ரோட்டில் நின்று கொண்டு டிராபிக் ஒழுங்கு படுத்துவது, பொது மக்களுக்கு இடையூறாக இருந்த மீன் பாடி வண்டிகளை ஒழித்தது, பொதுமக்கள் பஸ்சில் பயணம் செல்வதற்கு இடையூறாக சில வழித்தடங்களில் இருந்த ஆட்டோக்களை ஒழித்தது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருமுனை ஆக்ரமிப்பு கடைகளை இடிக்க கோர்ட்டில் கேஸ் போட்டு வெற்றி அடைந்தது என இவரது பொதுநல சாதனைகள் நீளும்.
மீன் பாடி வண்டிகளை கேஸ் போட்டு ஒழித்ததால் இவர் மீது கோவம் கொண்ட சிலர் அடியாள் வைத்து அடித்து இவரது ஒரு கண்ணை செயலிழக்க வைத்தார்கள். இருந்தாலும் இவரது சாதனை பயணம் இன்னும் தொடர்கிறது.
ஒரு மில்லில் பியூனாக வேலை பார்த்த ராமசாமி சென்னை பாரி முனையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போக்குவரத்து காவலர்க்கு உதவி இருக்கிறார். இதனால் அவரை பாராட்டும் வகையில் அவருக்கு அடையாள அட்டை வழங்கி இருக்கிறார்கள் போக்குவரத்து காவலர்கள். இதனாலேயே ராமசாமி என்ற பெயருக்கு முன்னால் 'டிராபிக்' என்ற அடையாள பெயர் ஒட்டி கொண்டு டிராபிக் ராமசாமி ஆனார்.
இப்படி பொதுநலம் ஒன்றையே குறிக்கோளாக வாழ்ந்து வருபவர்க்கு குடும்பம் எப்படி துணை நிற்கும்? அவர் முட்டாள்தனமான காரியம் செய்கிறார் என ஒதுக்கி வைத்துள்ளது அவரது குடும்பம். தனது பொது நல சேவையால் பல சமூக விரோதிகளின் எதிரி ஆகிவிட்டபடியால் தனது குடும்பத்துக்கு அவர்கள் மூலம் ஆபத்து வரலாம் என கருதி தற்போது நண்பர்களின் துணையுடன் தனியாக வசித்து வருகிறார்.
எந்த அரசு வந்தாலும், தப்பு நடக்கிற இடத்தில் எல்லாம் தட்டி கேட்கும் இவரால் அரசுக்கு தலை வலி தான். அதனால் தன் ஜெயலலிதா அரசில் இவர் போட்ட கேஸ் களுக்கு ஆதரவு அளித்த கருணாநிதி அரசு இன்று இவரை பொது நலத்துக்கு இடையூறு விளைவிக்கிறார் என அவ்வப்போது பிடித்து சிறையிட்டு விடுகிறது. அரசியல் கட்சிகள் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ இல்லையோ, தங்களுக்கு யாராவது இடையூறு செய்தால் அவர்களை இம்சிப்பதே வேலையாக பொய் விட்டது.
டிராபிக் ராமசாமி போல ஒரு பொது நலம் எனக்கும் உங்களுக்கும் எல்லோருக்கும் இருந்தாலும் குடும்பம் அல்லது தொழில் என ஏதாவது ஒன்று தடுக்கும். எனவே முழுதாக இறங்காவிட்டாலும் சமூகம் நன்றாக இருக்க களத்தில் இறங்கி களை எடுக்கும் டிராபிக் ராமசாமிகளுக்கு உதவியாக இருப்போமா?