Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- 10. விபூதியோகம்
by
on 23rd February 2012 at 06:33 AM (407 Views)
த்யூதம் சலயாதாமஸ்மி தேஜஸ்தேஜஸ் விநாமஹம்!
ஜயோsஸ்மி வ்யவஸாயோsஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம்!! 36
வஞ்சகர்களிடம் சூதாட்டமாகவும், திறமை படைத்தவர்கள்டம் அவர்களின் திறமையாகவும் நான் இருக்கிறேன். வெற்றி பெறுபவரிடம் வெற்றியாக இருக்கிறேன். முயற்சி செய்பவர்களிடம் விடாமுயற்சியாக இருக்கிறேன். ஸாத்வீகரிடம் நான் ஸத்வகுணமாக இருக்கிறேன்.
வஞ்சகர்களிடம் தான் சூதாட்டமாக இருப்பதாக பகவான் கூறுவதால் அவர் சூதாட்டத்தை விளையாடுவதில் தவறில்லை என்று கூறுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எப்படி கொடிய விலங்குகளான சிங்கம், முதலை இவற்றைத் தம் ஸ்வரூபம் என்றும் அழிவை விளைவிக்கும் நெருப்பு, உயிரைப் பறிக்கும் மரணம் ஆகியவற்றையும் தன் ஸ்வரூபமென்பதாகத் தெரிவிப்பதால் சூதாட்டமும் அழிவையே கொடுக்கும் என்பதை மறைமுகமாகத் தெரிவிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
திறமை, வெற்றி, முயற்சி, சத்வகுணம் ஆகியவை பகவானை அடைய உதவும் பண்புகளாகும். அத்தகைய பண்பு பெற்றவ்ர் அதனைத் தன்னியல்பாகக் கருதிச் செருக்கடையாமல் அச்சீரிய குணங்கள் பகவானால் அள்ளிக்கப்பட்டதென்று கருதி கர்வம் கொள்ளாமல் இருக்கவேண்டும்.
வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோsஸ்மி பாண்டவாநாம் தநஞ்ஜய:
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி: 37
நான் யாதவ குலத்தவரில் வஸுதேவபுத்ரனான கிருஷ்ணனாகவும், பாண்டவர்களில் அர்ஜுனனாகவும், முனிவர்களில் வியாசராகவும், கவிஞர்களில் சுக்ராசார்யராகவும் இருக்கிறேன்.
இங்கு பகவான் அவதாரமும் அவதாரம் எடுப்பவனும் ஒன்றே என்பதனைச் சுட்டிக்காட்டுகிறார்.
பகவான் நரநாராய்ணனாக அவதாரம் செய்தபோது நரனாக அர்ஜுனனும் நாராயணனாக பகவானும் அவ்தாரம் எடுத்தனர். அர்ஜுனன் பகவானிடம் பரம பக்தியும் நேசமும் கொண்டு இருந்ததால் பாண்டவர்களில் தான் அர்ஜுனன் என்று கூறுகிறார்.
வேத வியாசரே வேதங்களைப் பகுத்தளித்தார். இதிகாச புராணங்களையும் இயற்றினார். எனவே முனிவர்களில் தாம் வியாசரென்பதாகத் தெரிவிக்கிறார்.
ப்ருகு முனிவரின் ச்யவனர் முதலான ஏழு புதல்வர்களில் சுக்கிரனே கல்விகேள்விகளில் தேர்ச்சி பெற்று சஞ்சீவனி வித்தையையும் அறிந்தவராவார். சிறந்த கவியாகவும் விளங்கினார். இவருக்கு காவ்யர், உஸனர் முதலான பெயர்களும் உண்டு. இவர் அசுரர்களூக்குக் குருவாக இருந்தார். எனவே கவிகளில் தாம் சுக்ராசாரியரென்று கூறுகிறார்.
தண்டோ தமயாதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்!
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்!! 38
அடக்கியாள்பவரிடம் அடக்கும் சக்தியாக இருக்கிறேன். ஜயிக்க விரும்புவோரிடம் நீதியாக இருக்கிறேன். நான் ரகசியமான விஷயங்களில் மௌனமாகவும் , ஞானிகளிடம் ஞானமாகவும் இருக்கிறேன்.
அடக்கியாள்வதன் மூலமே குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க இயலும். எனவே அடக்கியாள்பவரிடம் தான் அடக்கும் சக்தியாக இருப்பதாகக் கூறுகிறார்.
தர்ம வழியில் போரிட்டுப் பெறும் வெற்றியே நிலையானதாக இருக்கும். எனவே வெற்றியைப் பெற விரும்புவரிடம் தான் நீதியாக இருப்பதாகக் கூறுகிறார்.
மறைத்துக் காப்பாற்றப்பட வேண்டிய ரகசியங்களை மௌனத்தின் மூலமே காப்பாற்ற முடியும் என்பதால் தான் மௌனத்தின் ஸ்வரூபமாக உள்ளதாகக் கூறுகிறார்.
பரமாத்ம ஸ்வரூபத்தை அனுபவத்தில் அறிந்த ஞானிகளிடம் தான் ஞானத்தின் ஸ்வரூபமாக இருப்பதாகக் கூறுகிறார்.
யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந!
ந ததஸ்தி விநா யஸ்த்யாந்மயா பூதம் சராசரம்!! 39
அர்ஜுநா! எல்லப் பொருட்களுக்கும் எது வித்தோ அதுவும் நானே. என்னையன்றி அசையும் பொருளோ அசையாப்பொருளோ ஏதோ உளதோவெனில், அது இல்லவே இல்லை.
அவனன்றி ஓரணுவும் அசையாது. அவன் சங்கல்பமின்றி எந்த ஒரு அசையும் பொருளோ அசையாப் பொருளோ தோன்றவோ இயங்கவோ முடியாது. எனவே அனைத்துப் பொருட்களுக்கும் தானே வித்தாக இருப்பதாகக் கூறுகிறார்.
கீதை தொடரும்















Email Blog Entry