1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனிமைத் தமிழ் மொழி எமது !

Discussion in 'Posts in Regional Languages' started by PavithraS, Apr 13, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    (முற் குறிப்பு : இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள இலக்கிய வரலாறுகள் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் படித்ததிலிருந்து பகிர்ந்து கொண்டவை )

    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வாசகர்களுக்கு என் பணிவான வணக்கம் ! இக்கட்டுரையில் மொழி என்பது என்ன என்றும், தாய்மொழியின் அவசியம் என்ன என்பது பற்றியும், தமிழர்களின் மொழியாகிய தமிழின் சிறப்புகள் பற்றியும் மிகவே சிலவான செய்திகளை மட்டும் எனக்குத் தெரிந்த சொற்ப அறிவைக் கொண்டு, பகிர்ந்து கொண்டுள்ளேன். குற்றம் பொறுக்க வேண்டுகிறேன் ! நன்றி !

    மொழி என்பது என்ன ?

    அண்டத்தின் அனைத்து உயிர்களுக்கும் மொழி என்பது ஒன்றைப் பற்றிய தன் எண்ணத்தை, தனது நிலையை, தன் மன உணர்ச்சியை, தன் உள்ளக்கிடக்கையை , அடுத்தவருக்குத் தெரியப்படுத்தக்கூடியத் தொடர்புச் சாதனமேயாகும் . அது அசைவு எனப்படும் சைகையாகவோ (எ-டு கண்ணசைவு, கையசைவு, ), ஒலிக்கப்படும் ஓசையாகவோ,(எ -டு அழுகை, உரத்தச்சிரிப்பு ), தனித்திறமைகளிடமிருந்துப் பிறக்கக்கூடியக் கலைகளின் காட்சி வழியாகவோ( எ -டுத்துக்காட்டு ஓவியம் புகைப்படம்,நடனம் ,இசை ), எழுதப்படும் சொற்களாகவோ, இவை அனைத்தும் ஒன்றிணைந்த வாய்மொழிப் பேச்சாகவோ இருக்கலாம். இவற்றுள் ஓசையும், அசைவும் ஐந்தறிவு வரையுடைய உயிரனங்களும் கையாளும் அடிப்படைத் தகவல் தொடர்புச் சாதனம் எனக் கொண்டால், மனிதனுக்கென்றெ இருக்கக் கூடிய சிறப்பு மொழி வகை தான் பேச்சும், எழுத்தும், இன்னபிற கலைகளும் . இவையே மனிதன் தனக்கிருக்கக் கூடிய அறிவை மேலும் வளர்த்துக்கொள்ளத் தேவையான அடிப்படை.

    மனிதனுக்கு மொழியின் அவசியம் என்ன ?

    மொழியப் படுவது மொழி என்ற கோட்பாட்டிற்கிணங்க இவற்றுள் வாய்வழி பேசுவதே மொழி என்ற சொல்லால் பெரிதும் குறிக்கப்படுவது. காரணம் , வாய்மொழியின் மூலமாகவே மனிதன் (மனித குலம் பேச ஆரம்பித்ததே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் என்று மனிதவியலார் கூறுகின்றனர்) பற்பல காலமாய்த் தன் கருத்துகளைத் தெரியப்படுத்தி வந்திருக்கிறான், அதற்கு ஒத்தக் கருத்துகளோ, மாற்றுக் கருத்துகளோ முன்வைக்கப்படும் போதெல்லாம், அவனது அறிவு மேலும் முன்னேற்றப் பட்டிருக்கிறது. தனிமனித அனுபவத்தை சக மனிதர்களின் அனுபவமாக மாற்றினால் அங்கே பிறப்பது தான் இலக்கியம் . இந்த அனுபவப்பகிர்வு என்பதற்கு அடிப்படை மொழி.அதன் தொடர்ச்சியாகவே, புவியியல், கடலியல், வானியல், இறையியல், அறிவியல், அழகியல், அன்பியல் என அனைத்துக் கூறுகளிலும் மனிதன் தன் சிந்தனையைச் செலுத்தி , ஆழ்ந்து ஆராய்ந்து, உண்மையைத் தான் அறிந்ததோடல்லாமல், அதைக் காலத்திற்கேற்றபடி வரலாற்றில் பதித்து, முன்னேற்றப் பாதையின் சங்கிலித் தொடரைத் தொடங்கியிருக்கிறான். அந்த வழியில் வந்து தான் இன்றைய மனித குலம் தன் அறிவின் வளர்ச்சியில் நாள்தோறும் புதுப் புது உயரங்களை எட்டிக் கொண்டிருக்கிறது, சங்கிலித் தொடரை நீட்டிக் கொண்டிருக்கிறது .

    தாய் மொழியின் அவசியம் என்ன ?

    சரி, இவ்வாறான தகவல் பரிமாற்றத்திற்கும் , அறிவின் வளர்ச்சிக்கும் உலகில் வழங்கும் எந்த மொழியையும் பயன்படுத்தலாமே, ஒரு மனிதனுக்குத் தாய்மொழி அறிவின் அவசியமும், கட்டாயமும் என்ன ? ஒரு மனிதனின் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றமும், அறிவுப் பகிர்வும் மட்டுமல்ல, மனித மனங்களின் நுண்ணிய உணர்வுகளின் வெளிப்பாடும் தான் என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பசி, உறக்கம், வலி, வேதனை, சோகம், மகிழ்ச்சி,பாசம், நேசம், நட்பு, காதல், கனிவு, கருணை, என்பன போன்ற நுட்பமான உணர்வுகளை வேற்று மொழியில் வெளிப்படுத்துவதைக் காட்டிலும், நம் மூதாதையர்களால் மொழியப்பட்டு , நமை ஈன்ற தாய் தந்தையரின் மூலம் நமது மரபணுக்களிலும், மூளையின் நரம்புமண்டலங்களிலும் இயற்கையாகவே பதிக்கப்பெற்றிருக்கக் கூடிய அவரவர் தாய் மொழியின் மூலம் தான் துல்லியமாக எடுத்தியம்ப இயலும்.

    மேலும் தாய் மொழியில் பேசுவதும், பழகுவதும் தான் நம் அறிவுத்திறனை மேலும் வலிமையாக்கும் என்பதை மனித மூளை ஆராய்ச்சியாளர்களும் உறுதியாகச் சொல்கின்றனர் . தாய்மொழி வழிக் கல்விதான் ஒரு மனிதனின் சிந்தனைக்கு நல்ல வித்தாக அமையும் என்பதை சமீப காலங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். வேற்று மொழியில் பெரும்பாலும் கல்வி பயிலாத, தம் தாய் மொழியிலேயே கல்வி பயின்ற ,நமக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த,வாழ்ந்து வருகின்ற தலைமுறையினரின் அறிவுத் தெளிவே அதற்கு சாட்சி.

    தாய்மொழியைத் தெரிந்திருப்பது தன்னையே அடையாளம் தெரிந்திருப்பதற்குச் சமமாகும். தாய்மொழியை மறந்து விட்டு , வேற்று மொழியைக் கொண்டாடுவது என்பது, தன்னுடைய உற்றாரை மதிப்பதை விடுத்து, வேற்றாரோடு உறவாடுதல் போலத்தான். அவ்வேற்றார் மிக நல்லவராகவே இருக்கலாம், அவரால் நமக்கு மிகுந்த பயன்களும் கிடைக்கலாம், ஆனால் அவற்றிற்காக , நம் இனத்தையும், குணத்தையும் விட்டு விடுதல் அழகா ?


    இன்று உலகம் சுருங்கி விட்ட நிலையிலும் , எல்லா இனத்தவரும் உலகின் எல்லா பாகங்களிலும் குடியேறிவிட்ட நிலையிலும், அவரவர் வாழும் கால, தேசப் பிரமாணங்களை உத்தேசித்து, ஆங்காங்கே வழங்கக் கூடிய மொழிகளைக் கற்றுத் தேர்தல் வாழ்க்கையின் நடைமுறைத் தேவையும் தீர்வுமாகும். அதற்காக நம் தாய்மொழியைப் பேசாமலும் கற்காமலும் இருந்து விடுதல் , நம் வேர்களை அழித்து விடும். எதிர்காலத் தலைமுறையினருக்கு நம்மைப் பற்றிய வரலாற்றை எடுத்துக் கூறாமல் போதல் அவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய துரோகமும் ஆகும்.

    (முதற் பகுதி நிறைவு. இதன் தொடர்ச்சியைக் கீழே காணலாம்)
     
    jskls, IniyaaSri, suryakala and 2 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மேற்பகுதியின் தொடர்ச்சி - நிறைவுப் பகுதி

    தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒரு சில

    "காக்கைக்கும் தன் குஞ்சுப் பொன்குஞ்சு" என்ற வகையிலே, அவரவர் தாய் மொழி அவரவர்க்கு உயர்வானது என்றாலும் நம் தாய் மொழியாம் தமிழுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்புகள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா ? அதற்கு விடை காண வேண்டுமென்றால் , ஒரு மொழியின் சிறப்பும் வளமும் எதன் அடிப்படையில் அளவிடப்படுகின்றது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

    ஒவ்வொரு மொழியிலும் இயற்றப்பட்டுள்ள இலக்கியம் என்பது தனிமனித அல்லது அந்தச் சமூகத்தின் அறிவுத் தொடக்கமும் அதை அனைவருடன் பகிரும் வழிமுறை என்பதாலும் , அவ்விலக்கியம் தோன்றிய போது, அம்மொழி பேசிய சமூகத்தின் தன்மைகளையும், நடைமுறைகளையும் , கோட்பாடுகளையும், பண்பாட்டையும் , முக்கியமாக அம்மொழியாளர்களின் அறிவுத் திறனையும் பதிந்து வைக்கும் வரலாற்றுப் பெட்டகங்களாகவும் திகழ்வதால் தான், எந்த ஒரு மொழியின் சிறப்பும் , தொன்மையும், அதை வழங்கும் இனத்தின் அடையாளமும், பண்பும் ,அம்மொழியில் இருக்கக்கூடிய இலக்கியங்களை வைத்தே அளவிடப்படுகிறது . அந்த அளவீட்டின் படி பார்த்தாலும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி தன்னுடைய எண்ணற்ற இலக்கண இலக்கியச் செல்வ வளத்தால் மிகவும் மேம்பட்ட இடத்திலேயே இருக்கிறது . இதை உலகத்தின் பன்மொழி வல்லுனர்களும் உறுதிப்படுத்துகிறார்கள் என்பதும் சிறப்பு.

    "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தக் குடி தமிழ்க் குடி" என்று சிறப்பித்துச் சொல்லப்படும் தமிழ் மொழியின் காலம் சுமார் 10000 ஆண்டுகள் என்பதை 'நக்கீரர்' என்ற புலவர் 'இறையனார் அகப்பொருள்' என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாகப் பதிந்திருப்பதின் மூலம் உணரலாம். இவ்வளவு தொன்மை வாய்ந்த மொழியாயிருப்பினும், அதன் சீரிளமைக் குன்றாமல் இருப்பதும் தமிழின் சிறப்புகளில் ஒன்று தான் !

    மேலும் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் , இக்குமரிக் கண்ட வரலாற்றை விரிவாகச் சொல்கிறது . கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் . இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா , இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் குமரிக்கண்டம்.ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பஃறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. குமரிக்கோடு, பன்மலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது .

    சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் என்ற உரையாசிரியரின் விரிவான விளக்கத்தினால் நமக்கு இந்த அபூர்வத் தகவல்கள் கிடைத்துள்ளன ! அதன் பிறப்பிடமாகியக் குமரிக்கண்டம் நீரில் மூழ்கிப் போனாலும், தமிழ் மொழியும், அதன் வரலாறும் அழிந்துவிடவில்லை என்பதும் தமிழின் தனிச் சிறப்பு ! அது மட்டுமல்லாது, தாய் மொழி என்ற பெயருக்கு ஏற்றவாறு, நம் தமிழ் மொழி பல மொழிகளின் பிறப்பிடமாகவும் இருப்பதும் அதன் தனிச்சிறப்பே !


    அதன் காரணம் தமிழர்கள் அந்தக் காலத்திலேயே தரைவழி மார்கங்களும், கடல்வழி மார்கங்களும் பற்றிய அறிவைத் தெளிவாகக் கொண்டிருந்ததும், வாழ்க்கை நடத்துவதற்கென்று உலகின் மற்ற இடங்களுக்குப் புலம் பெயர்ந்த போதும் தங்கள் வேர்களை மறவாதிருந்ததும் தான். இன்றைக்கு அரைநூற்றாண்டுகளுக்கு முன்பு தான் புலம் பெயர்ந்து வேறிடம் சென்ற தமிழர்கள், தாய்மொழியைக் கையாளாமலிருப்பதை இங்கு ஒப்பு நோக்கின் நகைப்பே எழுகிறது .


    தமிழ் என்ற சொல்லுக்கே "தகுந்த முறையில் பேசக்கூடிய தமது மொழி" என்று விளக்கம் கூறுகிறார்கள் தமிழறிஞர்கள் . தமிழ் என்பது மொழியை மட்டுமல்ல, அதைப் பேசும் மக்கட்சமூகத்தையும், அவர்களது நிலப்பரப்பையும், பண்பாட்டையும்,வாழ்வியல் முறைகளையும் சேர்த்தேக் குறிக்கின்றது தமிழ் தமிழ் என்றுத் திரும்பத் திரும்பக் கூறிப் பாருங்கள், அமிழ்து, அமிழ்து என்ற ஓசை வரும். அமிழ்து என்றால் அமுதம் என்பதைக் குறிக்கும் சொல் . சரி . அமுதம் என்றால் என்ன ? தன்னை உண்பவருக்கு, மூப்பும் இறப்புமாகிய பிணிகள் அண்டாமல் என்றும் நிலைத்திருக்கக் கூடிய சிரஞ்சீவிப் பேற்றினை அளிக்க வல்ல உயர்ந்த பொருளே அமுதம்.


    வெறும் பூத உடல் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் மண் ஆகிய ஐந்தின் சேர்கையினால் உருவாவதே பூத உடல்) அழியாமல் காக்கவல்ல அமிழ்தத்தைவிட, தன்னுள் சொல்லழகும், பொருளழகும், கருத்தழகும் அணிகளாய்ப் பூண்ட, பற்பலவான இலக்கியச் செல்வங்களைப் பெற்றெடுத்துள்ள அன்னையாம் தமிழ் மொழியானவள் , அவளைப் பேசும் , அவளது இலக்கியங்கள் காட்டும் உயரிய நெறிகளையேத் தங்கள் வாழ்வியல் முறையாக ஏற்றுக் கொண்டுள்ள உயிர்களுக்கெல்லாம் என்றும் திகட்டாத ,மேலான ஆன்ம ஆனந்தமென்னும் அமரத் தன்மையைத், தேனமுதாகப் புகட்டுகிறாளே , அந்த மொழி அமிழ்தமே சிறந்தது.

    உயிரும்(அ முதல் ஔ வரை 12, அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ) மெய்யும் (க் முதல் ன் வரை 18 , க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ) தனித்தும், இரண்டும் கலந்து உயிர்மெய்யாகவும் (க முதல் னௌ வரை 18 x 12 = 216 ) , ஆய்த எழுத்து அஃகேனம் ( ஃ =1 ) என்றும் விரவி இருக்ககூடிய, 247 எழுத்துருக்களைப் பெற்றுள்ள நம் தமிழ் மொழி, அவ்வெழுத்துக்களின் ஓசையை வைத்து மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது . அதாவது உச்சரிப்பதற்கு சற்றுக் கடினமாகவும், நாபிக்கமலத்திலிருந்து எழும்பக்கூடிய தடித்த ஓசையுடையவனவாகவும் உள்ள க் ச் ட் த் ப் ற் என்ற ஆறு எழுத்துகளும் 'வல்லினம்' எனும் வகையைச் சேர்ந்தவை . உச்சரிப்பதற்கு எளிதாகவும் , நாசியியில் இருந்து எழும்பக்கூடிய மென்மையான ஓசையுடயனவாகவும் இருக்கும் , ங் ஞ் ண் ந் ம் ன் என்ற ஆறு எழுத்துகளும் 'மெல்லினம்' எனும் வகையைச் சேர்ந்தவை. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட உச்சரிப்பும் , வாயிலிருந்து எழும்பக்கூடியனவாகவும் கடுமையும், மென்மையுமற்ற வழுக்கிச் செல்லக்கூடிய ஓசையுடையனவாகவும் இருக்கும் ய் ர் ல் வ் ழ் ள் என்ற ஆறு எழுத்துகளும் 'இடையினம்' எனும் வகையைச் சார்ந்தவை . எழுத்துகளில் உயிர் வந்து மேவக்கூடிய மெய்யின் தன்மையைப் பிரிப்பதிலேயே, நிரம்பப் பொருள் கொண்ட வகையில் இனம் பிரிக்கப்பட்டுள்ள நம் தமிழின் பெருமையை என்ன சொல்வது ?

    வன்மையும் , மென்மையும் , இரண்டிற்கும் இடைப்பட்டத் தன்மையுமாக உயிர்களனைத்தும் கொண்டிருக்கும் குணாதிசயங்களைக் குறிக்கும் வகையில் இனம் பிரிக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல ,இம்மொழியின் பெயர் கூட அந்தக் கிரமத்தில் அமைந்திருப்பதும் அதிசயமே ! வல்லினத்தில் இருந்து 'த'கரமும் ,மெல்லினத்திலிருந்து 'ம'கரமும் , இடையினத்திலிருந்து வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பெழுத்தான 'ழ'கரமும் அழகாய் அமையப் பெற்று அனைத்துத் தன்மையும் உடையனவாக இருப்பதே உலக இயல்பு என்பதைக் குறிக்கும் வகையிலும் , இனிமையான அமுதம் என்ற அருமையாகப் பொருள் வரும்படியும் , 'தமிழ்' என வழங்கி வருவதும் நமக்கு எவ்வளவு இன்பத்தைத் தருகின்றது !

    இவையும் இன்னும் பல சிறப்புகளையும் தனக்கென்று கொண்டுள்ளத் தமிழாகிய அமிழ்தத்தின் குழந்தைகளாகிய நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறோம் ? தமிழைப் போற்றுவோம் ! வாழ்வில் ஏற்றம் பெறுவோம் ! நன்றி !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா


    ( இரண்டாம் பகுதி நிறைந்தது )
     
  3. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நேற்றுதான் விக்கிபீடியாவில் வல்லினம் பற்றி பார்த்துகொண்டு இருந்தேன், இத்தனை விலாவரியாக இங்கே மீண்டும் படித்ததில் மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது! இந்த பதிர்வுக்கு மிக்க நன்றி! கடைசியில் தமிழ் பெயர் காரணம் கேட்கவே இனிக்கிறது! பகிர்ந்துகொண்டதற்கு மீண்டும் நன்றிகள்! :)

    PS: இன்று ஒரு திருக்குறள் என்று வந்த எனக்கு ஒரு சின்ன ஏமாற்றும்! பரவாயில்லை உங்கள் தரப்பு நாயம் புரிகிறது! :)
     
    uma1966, jskls and PavithraS like this.
  4. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    பவித்ரா இரண்டு கட்டுரைகளும் அருமையோ அருமை. எனக்கு பள்ளி நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது. தமிழுக்கும் அமுதென்று பேர். உங்கள் கட்டுரை அமுதமாக இனிக்கிறது
     
    PavithraS likes this.
  5. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு மகள் பவித்ரா @PavithraS,

    இரண்டு பகுதிகளில் நம் தாய் மொழியின் அருமை பெருமைகளை அழகுறப் படித்து மிக மிக மகிழ்ந்தேன்.

    இனிய அருமையான கட்டுரைகள்.

    நன்றி, செவ்விய தமிழ்ப் பணி இனியும் இனியும் இனிதாய்த் தொடரட்டும்!!
     
    uma1966 and PavithraS like this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @kaniths , உங்கள் தமிழார்வம் எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது ! வாழ்த்துகள் !

    @uma1966 , @suryakala உங்களது பாராட்டுகளுக்கு நன்றி !

    @IniyaaSri கட்டுரையை வாசித்து , விரும்பியமைக்கு (லைக்) நன்றி !
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    One of the best things that happened to us is your acquaintance. Thank you for sharing the wealth of information with us. Thank you Pavithra

    I wonder how I can express better in Tamil than my own mother tongue.
     
    uma1966 likes this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தோழி ! பெரிய வார்த்தைகள் கூறியுள்ளீர்கள் ! நான் ஒரு தமிழ் ஆர்வமுடைய தனி நபர். உங்களைப் போலவே தேடித் படித்து என் அறிவை வளர்த்துக் கொள்ள ஆர்வமுடைய சாதாரணப் பெண்மணி. அப்படி எனக்குத் தெரிந்தவற்றை மற்றவரோடுப் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் அடையும் ஆன்மா ! அவ்வளவே ! உங்கள் தொடர் ஆதரவிற்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    uma1966, kaniths and jskls like this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமையான கட்டுரை பவித்ரா, எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கு, என்னுடைய தாய்மொழி திரிக்கு இவ்வளவு பின்விளைவா என்று ....ரொம்ப ரொம்ப நன்றி .....நிறைய எழுதுங்கள் ...படிக்க காத்திருக்கோம், முடியும்போது அந்த குறள் திரியையும் தொடருங்கள் பவித்ரா , இது என் அன்பு வேண்டுகோள் :)
     
    kaniths, uma1966 and PavithraS like this.

Share This Page